எளிதாக தொழில்செய்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 130-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஒரே ஆண்டில்மட்டும் இந்தியா 12 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளது.

உலகவங்கி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டிலும் தொழில்செய்வதற்கு ஏற்ற சூழல்பற்றி அறிக்கையாக சமர்பித்து வருகிறது. அண்மையில் கடந்த ஆண்டின் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில் 189 நாடுகளின் தொழில் துறை பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பட்டியலில் கடந்தஆண்டு 142-வது இடத்தைப் பெற்று இருந்த இந்தியா, தற்போது 12 இடங்கள் முன்னேறி 130-வது இடத்தைப்பிடித்து உள்ளது.


கடந்த ஆண்டு 128-வது இடத்தில்இருந்த பாகிஸ்தான் 10 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 138-வது இடத்தை பிடித்தது. சீனா 6 இடங்கள் முன்னேறி 84-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா 12 இடங்கள் முன்னேறியிருப்பது குறித்து உலகவங்கியின் தலைமை பொருளாதார வல்லுனரும், மூத்த துணை தலைவருமான கவுசிக்பாசு நிருபர்களிடம் கூறுகையில், “142-வது இடத்தில் இருந்து 130-வது இடத்துக்கு இந்தியா முன்னேறிஇருப்பது பொருளாதாரத்திற்கான நல்ல அறிகுறியை காட்டுகிறது. இந்தியாவில் நல்லநகர்வுகள் நடப்பதை காட்டும் அடையாள மாகவும் இது தெரிகிறது. பெரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் 12 இடங்கள் முன்னேற்றம் என்பது மிகப்பெரிய சாதனைதான்” என்று குறிப்பிட்டார்.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு தொழில்துறையில் இந்தியா மேற்கொண்ட 2 முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள்தான் இந்த முன்னேற்றத்துக்கு காரணம். குறிப்பாக இந்தியாவில் குறைந்தமுதலீடு இருந்தாலே எளிதாக தொழில் தொடங்கிவிடலாம் என்பதும், தொழிலை நடத்துவற்குரிய சான்றிதழ்களை பெறுவதில் உருவாக்கபட்ட சீரான முறை என்பதும் குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவித்து உள்ளது.

உலக வங்கியின் உலகளாவிய சுட்டிக்காட்டும் குழுவின் இயக்குனர் லோபஸ் கார்லோஸ் கூறும்போது, “தொழில் தொடங்குவதற்குரிய சீர்திருத்த ங்களை இந்தியா மேற்கொண்டது நல்லபயனை அளித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கு இன்னும் முன்னேற்றம் கிடைக்கும்’’ என்றார்.

Leave a Reply