தில்லியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தங்கியிருந்த அரசு இல்லம், உரிய விதி முறைகளின் அடிப்படையிலேயே மத்திய இணையமைச்சர் மகேஷ்சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

 தில்லி ராஜாஜி சாலையில் உள்ள 10ம் எண் அரசு இல்லத்தை அப்துல்கலாம் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அந்த வீடு மத்திய இணையமைச்சர் மகேஷ்சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் விமர்சித்து வந்தன. மேலும், உயர்தர 8-ஆம் பிரிவின்கீழ் வரும் வீட்டை இணையமைச்சருக்கு ஒதுக்கீடு செய்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பின.


 இந்நிலையில், இந்தவிவகாரம் குறித்து வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி:

 1962-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அமைச்சர்களுக்கான குடியிருப்புகள் சட்டத்தின் விதிஎண் 3-இன் படி, மத்திய அமைச்சர்கள், இணைய மைச்சர்கள் ஆகியோருக்கு உயர்தர 8-ம் பிரிவு இல்லத்தை ஒதுக்கீடுசெய்ய முடியும்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கூட ஜோதிராதித்ய சிந்தியா, ராஜீவ்சுக்லா, சச்சின் பைலட் உள்ளிட்ட இணையமைச்சர்களுக்கு இந்தவகை வீடுகளே ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 ஆனால், எதிர்க் கட்சிகள் இப்போது ஏன் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்து கின்றன? வழக்கம் போல தவறான தகவல்கள், பிரசாரங்களின் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு எதிர்க் கட்சிகள் முயலுகின்றன.
 ஆனால், அந்தவீட்டை இந்தமாதம் 31-ஆம் தேதிக்குள் காலி செய்யவுள்ளதாக கலாமின் உதவியாளர் தெரிவித்துள்ளார் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply