காங்கிரஸ் கட்சியில் நடிகைகள் குஷ்பு, நக்மா இருப்பது போன்று நடிகர்-நடிகைகளை நம்பி பா.ஜ.க. இல்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதை சந்திப்பதற்கான பணிகளை பா.ஜ.க. தொடங்கி விட்டதா?

பதில்:- பணிகளை தொடங்கி நடைமுறைப்படுத்தி கொண்டு இருக்கிறோம். அஸ்திவாரம் வலுவாக இருந்தால் தான் கட்டிடத்தை வலுவானதாக அமைக்க முடியும். அதன்படி, கட்சியின் அடிப்படை அஸ்திவாரமான கட்டமைப்பை வலுப்படுத்தி, தேர்தல் மாளிகையை எழுப்பி வருகிறோம்.

234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம். தேர்தல் பணிகளை 38 பிரிவுகளாக பிரித்து இருக்கிறோம். அதாவது, தேர்தல் அறிக்கை தயாரித்தல், விளம்பரங்கள் செய்தல் போன்ற பணிகள் இதில் அடங்கும்.

38 பிரிவுகளுக்கும் குழு அமைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கேள்வி:- தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பலம் என்ன? சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், வீடு தேடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்டதே? அதில், எத்தனை பேர் தமிழக பா.ஜ.க.வில் உறுப்பினராக சேர்ந்துள்ளார்கள்? அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு விட்டதா?

பதில்:- தமிழக பா.ஜ.க.வில் ஏற்கனவே 9 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். ‘மிஸ்டு’ கால் மூலம் 51 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். புதிய உறுப்பினர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தித்து வருகிறோம்.

கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. இப்போது உங்களுடன் இல்லை. பா.ம.க.வினர் டாக்டர் அன்புமணியை முதல்-அமைச்சராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி என்கிறார்கள். ஆக அதுவும் இல்லை. தே.மு.தி.க. உங்களோடு இருக்கிறதா? எனவே பா.ஜ.க.வோடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகள் கூட்டணியில் இருக்கும்?

பதில்:- தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தோம். இந்த கூட்டணியில் தற்போது அதிகாரபூர்மாக ம.தி.மு.க. மட்டுமே வெளியேறி இருக்கிறது. மற்ற கட்சிகள் திராவிடர் கட்சிகளை எதிர்த்து வருகிறது. தே.மு.தி.க. தொடர்ந்து திராவிடர் கட்சிகளை எதிர்த்து வருவது மகிழ்ச்சி.

பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு அவர்களுடைய(பா.ம.க.) சொந்த விருப்பம். அது தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவு இல்லை. தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவதில் பா.ஜ.க.வுக்கு கடமை இருக்கிறது. தே.மு.தி.க., பா.ம.க.வுக்கும் அதே கடமை இருக்கிறது. இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் கடமை இருக்கிறது. அந்தந்த கட்சியின் தலைவர்களும் அதனை நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால், இந்த இணைந்த கூட்டணி, இணையற்ற கூட்டணியாக மாறி, இன்றைய சூழ்நிலையில் வெற்றியடையும் என்று நான் உணர்கிறேன்.

தேர்தலுக்குள் இன்னும் பல புதிய அமைப்புகள், இயக்கங்கள் சேரலாம். அதற்கான ஆயத்த பணிகள், முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே நாங்கள் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்துவிடுவோம். மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு திட்டங்களுக்கு மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.

கேள்வி:- தி.மு.க., அ.தி.மு.க. வுடன் கூட்டணிக்கான வாய்ப்பு உண்டா?

பதில்:- தமிழக பா.ஜ.க. என்பது தனி கட்சி அல்ல. அகில இந்திய பா.ஜ.க.வுடன் ஒன்றிணைந்த அங்கம். மத்திய தலைமை எங்களை சுதந்திரமாக செயலாற்ற ஊக்கமளித்து வருகிறது.

அந்தந்த மாநிலங்களில் என்னென்ன? பிரச்சினைகள் இருக்கிறது என்பதை மத்திய தலைவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், மாநிலத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் அகில இந்திய பா.ஜ.க.வின் கருத்துக்கள் தான். எங்களுக்குள் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.

கேள்வி:- காங்கிரஸ் கட்சி நடிகைகள் நக்மா, குஷ்புவை களம் இறக்கி இருக்கிறார்கள். மற்ற கட்சிகளிலும் சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளனர். எனவே பா.ஜ.க.வில் புதிதாக தமிழ்நாட்டில் உள்ள சினிமா நடிகர்-நடிகைகள் சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- சினிமா நட்சத்திரங்களை கலைஞர்கள் என்று குறைத்து மதிப்பிட மாட்டேன். அதற்காக அதிகமாகவும் மதிப்பிட மாட்டேன். அவர்கள் பிரசாரத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். அறிமுகத்துக்கு தேவையாக இருக்கிறார்களே தவிர அவர்களால் தான் கட்சி வளர்கிறது என்று சொல்லிவிட முடியாது.

காங்கிரஸ் கட்சி இன்றைக்கு நடிகைகளை முன்னிலை படுத்துவது துரதிருஷ்டம். நாங்கள் கலைஞர்களை மதிக்கிறோம். அவர்கள் சேராதது பலவீனம் என்று நாங்கள் எடுத்து கொள்ளவில்லை. அவர்களை நம்பியும் பா.ஜ.க. இல்லை. எந்த துறையினராக இருந்தாலும் பா.ஜ.க. வரவேற்கிறது.

பா.ஜ.க.வின் பலமே உறுப்பினர்கள், கொள்கைகள், மக்கள் என்ற நிலையில் தான் நாங்கள் பயணிக்கிறோம். கட்சியின் கொள்கைகளை மறந்து, மூத்த தலைவர்கள்-உறுப்பினர்களை மறந்து, மக்களை மறந்து நடிகைகளை மட்டுமே நம்புவது சரியான அணுகுமுறையாக இருக்காது.

கேள்வி:- காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பது போல, பா.ஜ.க.விலும் கோஷ்டி பூசல் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறதே! இது தேர்தல் பணியை பாதிக்காதா?

பதில்:- நிச்சயமாக பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் கிடையாது. கட்சியில் பல பிரிவுகள் இருக்கிறது. ஆனால் கட்சி தலைவர்களிடையே இல்லை. பா.ஜ.க.வில் ஜனநாயகம் இருக்கிறது. சிலர் வெவ்வேறு கருத்துக்களை கூறலாம். ஆனால், அது வேற்றுமை கருத்து கிடையாது. இணைந்தே பணியாற்றுவோம். இணையற்ற வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.