104 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய உலகசாதனை படைத்துள்ளது. ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் இருந்து 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோசாட்-2 செயற்கைகோள் மற்றும் 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
 

320 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்துசென்றது.

கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் எடை 714 கிலோ. ஒவ்வொரு நானோ செயற்கைக்கோளும் 5 முதல் 10 கிலோ வரை எடைகொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

கார்டோசாட்-2 செயற்கைக்கோள் அனுப்புகிற படங்கள் வரை படப்பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர்விநியோகம், தரைபயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும் பெரிதும் உதவி கரமாகவும், சிறப்புக் குரியதாகவும் இருக்கும். இஸ்ரோ இதற்கு முன்பு ஒரேநேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஒரேநேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

இதுவரை அதிகபட்சமாக 37 செயற்கை கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலகசாதனையாக இருந்து வந்தது.

தற்போது 104 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 104 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய உலகசாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் 37 செயற்கைகோள்களை ரஷ்யா ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply