நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாக  கூறி சாகித்ய அகாடமி விருதுகளை எழுத்தாளர்கள் சிலர் திருப்பி அளித்து அரசியல் செய்து வரும் நிலையில் , மோடிக்கு ஆதரவாக பல எழுத்தாளர்கள், கல்வி யாளர்கள், கலைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் எழுத்தாளர்களின் எதிர்ப்புக்கு அவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாத அறிவுஜீவிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேர்தலில் தோல்விகண்டவர்கள், வேறுவழிகளில் தங்கள் எதிர்ப்புகளை காட்டிவருகின்றனர்’’

மோடியின் வெற்றியை சகிக்க முடியாமல், திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவிப்ப வர்களை பற்றி ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிடக்கூடாது. தாத்ரி சம்பவத்துக்கு மத்திய அரசுமீது குற்றம் சொல்லகூடாது. .தபோல்கர், கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தான்.

காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் கடந்த 1984-ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரத்தையும், மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரி கட்சி ஆட்சியில் 2007-ம் ஆண்டு நந்திகி ராமில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதையும் மோடி அரசு மீது குற்றம் சொல்லும் எழுத்தாளர்கள் வசதியாக மறந்துவிட்டனர். அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை.

எனவே, இந்திய மக்களை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், பொய்யான பிரச்சாரங்களை நம்பாதீர்கள். உங்கள் கவனத்தை ஒற்றுமை, வளர்ச்சியில்காட்டி இந்தியாவை மிகச்சிறந்த நாடாக்க உதவுங்கள். இவ்வாறு மோடிக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

இதில் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் தலைவர் லோகேஷ்சந்திரா, எழுத்தாளர் எஸ்எல்.பைரப்பா, ஜவகர்லால்நேரு பல்கலைக் கழக முன்னாள் இணை துணை வேந்தர் கபில்கபூர், ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் ஐசிஎச்ஆர் உறுப்பினர் திலீப் கே.சக்கரவர்த்தி, ஐஐஎஸ்சியை சேர்ந்த கே.கோபிநாத் உட்பட 36 அறிஞர்கள், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவுதெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply