பீகார் மாநில சட்ட சபைக்கு கடந்த மாதம் 12–ந் தேதி முதல் கடந்த 5–ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் 272 பெண்கள் உள்பட 3,450 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆட்சியை கைப்பற்ற பாஜக. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

மொத்தம் உள்ள 6 கோடியே 68 லட்சம் வாக்காளர்களில் 56.80 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும், 62,780 மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 39 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. மூன்றடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்புடன் 14 ஆயிரத்து 580 பேர் ஓட்டுக்களை எண்ணினார்கள். முதலில் தபால் ஓட்டுக்களை எண்ணி முடித்து விட்டு, பிறகு முகவர்கள் முன்னிலையில் மின்னணு எந்திரங்களில் உள்ள ‘‘சீல்’கள் அகற்றப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடந்தது

10 மணியளவில் 243 தொகுதிகளின் முன்னிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி, பா.ஜ.க. கூட்டணியை முந்தியது.

மெகா கூட்டணி 145 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. பா.ஜ.க. கூட்டணி 88 தொகுதிகளில் முன்னிலை பெற்று பின் தங்கியது.

பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் வேண்டும். நிதிஷ்குமாரின் மெகா கூட்டணி 145 இடங்களில் முன்னிலை பெற்றதால், அந்த கூட்டணி பீகாரில் ஆட்சியை பிடிப்பது உறுதியானது.

மூன்றாவது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்மந்திரி ஆகிறார். நாளை அல்லது நாளை மறுநாள் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அதன் பிறகு புதிய அரசு எப்போது பதவி ஏற்கும் என்பது தெரியவரும்.

Tags:

Leave a Reply