அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட, பிரதமரின், 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின்கீழ், ஐந்து மாதங்களில், 11.5 கோடி புதிய வங்கிகணக்குகள் தொடங்கப்பட்டு , சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை பாராட்டி, 'கின்னஸ்' புத்தகநிறுவனம் மத்திய அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த சுதந்திர தினத்தின் போது, உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திரமோடி, 'நாட்டுமக்கள் அனைவரும் வங்கி சேவையை பெறும்வகையில், 'ஜன் தன் யோஜனா' திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், 2015, ஜனவரி, 26ம் தேதிக்குள், நாடுமுழுவதும், 10 கோடி பேருக்கு வங்கிகணக்கு துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார்.

 இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிலும் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. 'அரசின் மானியம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களின் பயன்களை, இந்த வங்கி கணக்குகள் மூலமாக மக்கள் பெறலாம்' என, அறிவிக்கப்பட்டதால், வங்கி கணக்கு துவங்குவதில் மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. இந்தசேமிப்பு கணக்கை துவங்குவற்கு, வைப்புதொகை எதுவும் தேவையில்லை என்பதால், ஏராளமான மக்கள் போட்டிபோட்டு, வங்கி கணக்குகளை துவங்கினர்.

இதையடுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே, 10 கோடி என்ற இலக்கை கடந்து, ஐந்து மாதங்களில், 11.5 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply