தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.  கடலூர் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கடலூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும், உதவியையும் வழங்கிவிட்டு சென்னை வருவதற்குள் சென்னை கடல் ஊர் ஆகிவிட்டது.  பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் எனது வேண்டுகோளை அடுத்து பல இடங்களில் நிவாரணப்பணியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் சென்னையில்  தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு அளித்து உதவியிருக்கிறார்கள்.
 
    சமைக்க முடியாத மக்களுக்கு வயிறு நிறைய சிறு அளவிலாவது உதவ முடிந்ததே என்பது சிறிய மனநிறைவு ஆனால் இந்த மழையினால் மக்கள் படும் வேதனை வேதனையளிக்கிறது.  பேரிடர் மேலாண்மை என்பது இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்று, ஆனால் தமிழகத்தில் பேரிட மேலாண்மை என்பது ஏட்டளவிலேயே உள்ளது.  இன்று ஆண்டு கொண்டிருப்பவர்களும், முன்னால் ஆண்டவர்களும் பலமுறை தமிழகத்தை ஆண்டவர்கள்.

    அதிக மழை நீரை சேமிப்பதற்கும், வீணாக்காமல் தேக்கி வைப்பதற்கும், எந்த நடவடிக்கையும் இத்தனை ஆண்டுகளாகியும் எந்த முயற்சியையும் செய்யவில்லை என்பது வருத்தம்.  அதை விட வருத்தமளிப்பது இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போல் மழை பாதித்த இடங்களில் பேசிய முதல்வர் 3 மாதம் வேண்டிய மழை 1 நாளில் பெய்தால் என்ன செய்வது என்று வினவியிருக்கிறார்.  6 மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தாலும் கூட அதை நிர்வகிக்க வேண்டிய நிலையில் இருப்பதே அரசு நிர்வாகம்.

    இயற்கையும், மழையும் யாருக்கும் கட்டுப்படுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும், நில் என்றால் நிற்கவும், பெய் என்றால் பெய்யும் வகையில் இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று கட்டுப்படுத்துவதில் பேர்போன முதல்வருக்கு மிக நன்றாகத் தெரியும்.  இன்று அதிக மழைநீர் வெளியேற்றப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார் அதிக மழைநீர் உள் வாங்கப்பட்டு சேமிக்கப்படுகிறது என்று சொல்லும் அளவிற்கு ஏன் கட்டமைப்பை சரிசெய்யவில்லை என்ற கேள்வியே எழுகிறது.

    இனிமேலாவது காரணங்களை சொல்லிக் கொண்டிராமல் சில ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்வது நல்லது.  கடலூர் மறுபடியும் புயலால் தாக்கப்பட்டும், மழையினால் பாதிக்கப்பட்டும் வருகிறது.  600 ரூபாய் அழிவு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவித்த தமிழக அரசு எந்த அளவிற்கு அதை பயன்படுத்தியது என்பது கேள்வியே எழுகிறது.  வீராணம் தூர் வார 40கோடி ஒதுக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இன்று வீராணம் ஒழுங்காக தூர் வாரப்பட்டிருந்தால் இன்று கடலூர் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்காது என்கிறார்கள். 

அப்படியென்றால் ஒதுக்கபட்டது எல்லாம் ஒதுக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியே எழுகிறது.  இன்று பெய்வதைவிட அதிக மழை பெய்தாலும் தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், சென்னை இதை விட அதிக மழை பெய்தாலும் அதையும் தாங்கும்படியும், கட்டமைப்புகள் சீர் செய்யப்பட வேண்டும்.

சென்னை கட்டமைப்பு சரிசெய்ய வேண்டி மேயர் செயல்படாமல் போனது ஏன்?  முதல்வர் தொகுதியிலேயே மேயர் தாக்கப்பட்டிருப்பது முதல்வர் தொகுதியில் மக்களுக்கு உதவும் அவசியம் கூட அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்பது தானே உண்மை.  செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் இன்னும் தொடர வேண்டுமா?  என்ற கேள்வி எழுகிறது.

    சென்னையில் உதாரணமாக கூவம் தூர் வாரப்பட்டிருந்தால் சுத்தம் செய்யப் பட்டிருந்தால் இன்று அதிக மழையைத் தாங்கும் ஆறாகவும், மக்களுக்கு ஆறுதலாகவும் இருந்திருக்கும்.  ஆக உடனே நடவடிக்கை எடுக்கும் திட்டமாக கூவம் தூர்வாரப்படுவது ஓர் சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்.  அதனால் எப்போது மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதோ தற்காலிகமாக உணவு கொடுக்தோம், அரிசி கொடுத்தோம், நம் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் வருங்காலத்தில் இழப்பீடுகள் சரிசெய்வதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.  மழையினால் பாழாகி போன புத்தங்கள் கொடுப்பதற்கும், ரேஷன் கார்டு கொடுப்பதற்கும், வாக்காள அட்டை கொடுப்பதற்கும், மருத்துவ உதவி கொடுப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    பாஜக சார்பில் பாதிப்புகளை முழுவதுமாக கண்டறிந்து, சென்று பார்த்த விரிவான அறிக்கை மத்திய தலைமைக்கு அனுப்பியிருக்கிறேன்.  இரண்டு நாட்களில் மத்திய அமைச்சர்கள் வர வாய்ப்பிருக்கிறது.

    மக்களின் துயரத்தில் என்றுமே பங்கெடுத்துக் கொள்ளும் கட்சி பாஜக வழங்குகிறது என்பதை இந்த நாட்களில் தொண்டு செய்த பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாஜக மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி ;

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.