2011ஆம் வருடம் ஏப்ரல் 5ஆம் தேதி தில்லியில் ஜந்தர் மந்தரில் லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 98 மணி நேரத்தில் மத்திய அரசைச் சரணடைய வைத்தது. உண்மையில் நாடு முழுவதும் இவரது போராட்டத்திற்குப் பெருவாரியான மக்கள் தங்களது ஆதரவை நல்கினார்கள். படித்த இளைஞர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை

அளித்த லோக்பால் மசோதா, ஊழல் எனும் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தாகுமா என்பது பலரால் சந்தேகக் கண் கொண்டு கேட்கப்படும் கேள்வியாகும்.

1969ஆம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் தனது பரிந்துரை யில் உடனடியாக அரசின் செயல்பாட்டில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த லோக்பால் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களின் செயல்பாடுகளில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த லோக் ஆயுத்தா குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. இந்தப் பரிந்துரை யின் பேரில் மத்திய அரசு 1969ல் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. பாராளுமன்றத்தின் மேல்சபையில் இந்த மசோதாவிற்குப் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் இம்மசோதா காலாவதியாகிவிட்டது. ஆனாலும் சில எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இம் மசோதா கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

இம்மாதிரியான போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு 1971, 1977, 1985, 1989, 1996, 1998. 2001, 2005, 2008 ஆகிய வருடங்களில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகள் தாக்கல் செய்யப்பட்டாலும் மசோதா ஏன் சட்டமாகவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். காரணம் இம் மசோதாவைக் கொண்டு வருவதில் ஆளும் கட்சிக்கு அக்கறை இல்லாத காரணத்தால் பல்வேறு கால கட்டங்களில் இம் மசோதாவானது கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கும், பல்வேறு குழுக்களின் பரிந்துரை க்கும் சென்றதால் இம் மசோதா சட்டமாகவில்லை. நாடு விடுதலை பெற்ற 1947ஆம் வருடத்திலிருந்து இந்திய வரலாற்றில் ஊழல் கறைபடிந்த எந்த அமைச்சரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்கள் தண்டிக்கப்பட வில்லை என்பதை விட மோசடிக்குத் துணை போன அதிகாரிகள்கூட தண்டிக்கப்படவில்லை. தீர்ப்பு வழங்க

வேண்டிய நீதிபதிகள் கூட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் திகழவில்லை என்பது ஊரறிந்த உண்மையாகும். ஆகவே ஊழலின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிற கூச்சல் அதிகமானதே தவிர வழி தெரியவில்லை. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வெற்றியடைய முக்கிய காரணமாக அமைந்தது. அவரின் தலைமையில் உள்ள முக்கிய நிபுணர்கள் தொகுத்துக் கொடுத்துள்ள லோக்பால் மசோதாவின் வரை வு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஊழல் மற்றும் மோசடி செயல்பாடுகளுக்குத் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகக் கருதுவது சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள். மேலும் வழக்கறிஞரின் வாதத் திறமையில் பல வழக்குகள் ஆண்டுகள் பல ஆனாலும் விசாரணையே முடிக்க இயலவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாகும். பயங்கரவாதத்தை ஒழிக்க பொடா சட்டம் கொண்டு வந்தபோது ஏற்கனவே இருக்கின்ற கிரிமினல் சட்டத்தின் மூலமே பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என வாதிட்டவர்கள் இன்று ஆண்டுகள் 10க்கு மேலாகியும் அழிக்க முடியவில்லை என்பது போல முந்தைய லோக்பால் மசோதாவின் வரை வு தீர்மானம் ஊழலை முற்றிலும் ஒழிக்கக் கூடிய அளவில் அமையவில்லை.

இதற்கு மாற்றாக அண்ணா ஹசாரேவின் வரைவு மசோதா உள்ளது.

தற்போதைய சட்டத்தில் தவறு செய்த மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தின் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும். பிரதம மந்திரியின் மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும். மாநில முதல்வர் மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால் மாநில ஆளுநரின் அனுமதி பெற வேண்டும். அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால் சட்ட மன்றத் தலைவர் அதாவது சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சியின் உறுப்பினர். எனவே கட்சியின் தலைமை அனுமதி கொடுக்காமல் சபாநாயகர் வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க மாட்டார். ஆகவே ஊழல் புரிந்த அமைச்சர்கள் அல்லது சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுக்க இயலாது. இம்மாதிரியான சட்ட அமைப்பு இருக்கும் வரை ஊழலை ஒழிக்க இயலாது. புதிய மசோதா வரைவுப்படி

(1) உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் போல் சுதந்திர வாரியமாக லோக்பால் அமைய வேண்டும். இந்த அமைப்பின் மீது அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கமோ விசாரணையில் தலையிடக்கூடாத

(2) குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் மீது நடத்தும் விசாரணைக்குக் காலவரம்பு விதிக்க வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடிய வேண்டும். வழக்கு ஒரு ஆண்டுக்குள் முடிந்து தண்டனை விதிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் வழக்கு மற்றும் விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செல்லக்கூடாது.

(3) ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்குமானால் தண்டனைக் காலம் முடிவதற்குள் அவரிடமிருந்து இழப்புத் தொகை வசூலிக்கப்பட வேண்டும்.

(4) பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, முதல்வர், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும்போது அனுமதி பெற வேண்டும் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

(5) இந்த மசோதா சட்டமானால் பொதுமக்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தாலும், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தாலும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பிரச்னைக்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகார் பெறப்படவில்லை என்றாலும் இது சம்பந்தமாக லோக்பால் ஒரு மாதத்திற்குள் விசாரித்து பொது மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வழி வகை செய்யும். அதோடு அரசின் சார்பில் போடப்படும் சாலைகள் தரமற்றதாக இருந்தாலும், ரேஷன் கடைகளில் அளவு குறைவான மற்றும் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தி ஒரு ஆண்டிற்குள் தண்டனை வழங்கப்படும்.

(6) லோக்பால் அமைப்பில் உள்ளவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து இரண்டு மாதத்திற்குள் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.

(7) மத்திய அரசின் மத்திய ஊழல் கண்காணிப்பு நிறுவனமும், மத்திய புலனாய்வு அமைப்பும் லோக்பால் அமைப்புடன் இணைந்து விசாரணை நடத்தும்.

இவையே லோக்பால் மசோதாவின் வரைவில் உள்ள அம்சங்கள் ஆகும். எனவே இம்மாதிரியான அம்சங்களைக் கொண்டு மசோதா சட்டமானால் நாட்டில் நடக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டலாம் என்பது தெளிவு. எனவே இந்தப் போராட்டத்திற்காக அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவு பெருகியதில் எவ்வித வியப்பும் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.