சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கு பின்பும், இயற்கைபேரிடரை எதிர்கொள்ள, தமிழகம் தயாராகாமல் இருந்ததால்தான், சென்னை தத்தளிக்கிறது,'' என்று , மத்திய கப்பல் மற்றும் தரை வழி போக்கு வரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து, தினமலர்  நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழகத்தை, 50 ஆண்டுகளில், திமுக., – அதிமுக., மாறிமாறி ஆட்சிசெய்துள்ளன. இந்த கால கட்டத்தில் சுனாமி, புயல் என, இயற்கை சீற்றங்களை தமிழகம் கண்டுள்ளது; ஆனால், அவற்றி லிருந்து பாடம் கற்கவில்லை.

தற்போது, சென்னையை புயல்ஒன்றும் தாக்கவில்லை. ஆனால், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வெளியேற, எந்தவழியும் இல்லை. இந்தளவுக்கு நகரமைப்பு சீர்கெட்டுள்ளது. இதை சீர் செய்ய, நடவடிக்கை எடுக்கவில்லை.

மழையை எதிர்கொள்ள வேண்டிய பணிகளை செய்வதில், சென்னை மாநகராட்சி முற்றிலும் தோற்றுவிட்டது. இதனால்தான் சென்னை வாசிகளுக்கு இத்தனை பெரிய துன்பம்.

ஓராண்டுக்கு முன், சென்னை, மவுலி வாக்கத்தில், பல மாடிக் கட்டடம் இடிந்து, பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த கட்டடத்துக்கு, அத்து மீறி அனுமதி கொடுத்த, சென்னை பெருநகர வளர்ச்சிகுழும அதிகாரிகள் மீது, எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுபோலவே, மழைநீர் வெளியேறும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு தயாராக இல்லை. இதில், அரசியல் தலையீட்டை, அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதுடன், அதற்கு துணைநிற்பதே, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதற்கு முக்கியக்காரணம்.


தமிழக வெள்ளபாதிப்பு குறித்து, மத்திய அரசு, தகவல் அறிந்துவருகிறது. மாற்று கட்சி அரசு என்ற எண்ணமில்லாமல், தமிழக மக்களின் நலன்கருதி, மத்திய அரசு, தன்பங்கை செய்கிறது.
வெள்ளசேதத்துக்கு, மாநில அரசு அளிக்கும் அறிக்கையின்படி உரிய நிவாரணத்தை, மத்திய அரசு அளிக்கும். நிவாரண விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்துசெயல்பட வேண்டும். இதில், பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது.


மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, கட்சிகள் போட்டிபோட்டு நிவாரணங்களை அளிக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இப்படிசெய்கின்றன என கூற முடியாது. கட்சிகள் இல்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்கள்பாடு ரொம்பவும் கஷ்டமாகிவிடும்.ஆனால், இறுதி ஊர்வலத்தில் வெடிவெடிப்பது போல, பாதித்த மக்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்குவது போன்ற செயல்களும் நடக்கின்றன; அதை ஏற்கமுடியாது.

இயற்கை சீற்றம் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படும் போது, அவற்றை எதிர்கொள்ளும் தகுதி உடையதாக, மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் இருக்கும்.'தமிழகத்தில், பேரிடர்மேலாண்மை ஆணையத்தை நிரந்தரமாக ஏற்படுத்தவேண்டும்' என்ற கோரிக்கையை முழுமையாக ஏற்கமுடியாது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை திசைதிருப்பும் செயலாகவே, இதைப் பார்க்கமுடிகிறது.

காலத்துக்கு ஏற்ப பேரிடரைசமாளிக்க, புதிய அமைப்பு தேவை என்பது ஒரு புறம் இருந்தாலும், இப்போதைய பாதிப்புக்கு என்ன காரணம் என அறிந்து, அதை சீர் செய்யவே, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply