நாகர்கோவில்:''குளச்சல் துறைமுகத்துக்கு மார்ச் 8ம் தேதிக்குள் அடிக்கல் நாட்டபடும். ஸ்ரீவில்லிபுத்துார்-, விருதுநகர், -பார்த்திபனுார் உட்பட எட்டுசாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தபடும்,'' என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறினார்,

கன்னியாகுமரி– திருவனந்தபுரம் நான்குவழி சாலை உள்ளிட்ட 2,766 கோடி ரூபாயில் 105 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. அமைச்சர்
பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.அடிக்கல் நாட்டி நிதின்கட்காரி பேசியதாவது:தமிழகத்தில் 39 திட்டங்கள் மூலம் 1974 கி.மீ. ரோடுகள் 12 ஆயிரம் கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது. தற்போது 1300 கி.மீ. ரோட்டை 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த, ஒன்பது வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, ஒழுகினசேரி, செட்டிக்குளம் வடசேரி ஆகிய இடங்களில் 300 கோடி ரூபாயில் மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. நாடுமுழுவதும் 250 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் வழங்கபட்டது. அதில் 11 பாலங்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்துார்–சிவகாசி- -விருதுநகர்–திருச்சுழி– பார்த்திபனுார், திண்டுக்கல்– காரைக்குடி, வள்ளியூர்– திருச்செந்துார், தோப்பூர்–மேட்டூர்–பவானி– ஈரோடு, காரைக்குடி–பட்டுக்கோட்டை–தஞ்சாவூர், பெரம்பலுார்– ஆத்துார், சேலம்–ஊத்தங்கரை– திருப்பத்துார்,

திருவண்ணாமலை– கள்ளக்குறிச்சி ஆகிய ரோடுகள் ௭,௦௦௦ கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.தமிழகத்தில் 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க தயாராக உள்ளேன். இதன் மூலம் தமிழகத்துக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணிகள் கிடைக்கும். தேவையான ரோடுகளை தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தி பொன். ராதாகிருஷ்ணனே அறிவிக்கலாம்.

குளச்சல் துறைமுகம், குமரிமாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருக்கும் திட்டம். நிச்சயமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் தென்மாநிலங்களில் பொருளாதாரவளர்ச்சி ஏற்படும், மார்ச் 8ம் தேதிக்குள் மோடி, ஜெயலலிதா கலந்துகொள்ளும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். திருவனந்தபுரம்– கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்குவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. என்று பேசினார்.

Leave a Reply