நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக நடிகர் ஆமீர்கான் தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.


 "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆமீர்கான் பேசினார்.
 அப்போது அவர், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதால் இந்தியாவைவிட்டு வெளியேறி விடலாமா? என தனது மனைவி கேட்டதாக தெரிவித்தார்.

ஆமீர்கானின் இந்தக் கருத்துக்கு பாஜகவினர், திரையுலகினர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 இது குறித்து மும்பையில் பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

 இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்து ஆமீர் கான் பேசியுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு செல்லப் போகிறார்?

 இந்திய முஸ்லிம்களுக்கு இந்தியாவைவிட பாதுகாப்பான நாடு உலகில் வேறு எங்குமே கிடையாது.  இந்தியாவில் இருப்பது போன்ற சகிப்புத் தன்மையை வேறு எந்த நாட்டிலும் காண முடியாது.

இந்தியாவில் தான் முஸ்லிம்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது.  இந்தியாவில் சகிப்பின்மை நிலவுவது போன்ற மாயையை ஏற்படுத்துவதற்காக பிரபலமான சிலரை காங்கிரஸ் ஏவிவிட்டு சதிச்செயலில் ஈடுபடுகிறது.  ஆமீர்கானின் கருத்தை பாஜக நிராகரிக்கிறது என ஷாநவாஸ் ஹுசேன் தெரிவித்தார்.

Leave a Reply