உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

பிரேசில் நாட்டைப் போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார்வாகனங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி முதல் எத்தனாலில் ஓடும்.

ஹோண்டா, யமஹா மோட்டார் வாகனநிறுவனங்கள், இத்தகைய மோட்டார் சைக்கிள்களை தயாரித்து உள்ளன. எத்தனால் கொண்டு ஓடும்மோட்டார் சைக்கிள்கள் மூலம் வரும் லாபத்தினை கரும்பு விவசாயிகள் நேரடியாக அனுபவிப்பார்கள்.

பெட்ரோல் பம்புகளை போன்று எத்தனால்பம்புகள் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26-ந்தேதி) செயல்பட தொடங்கும். இதற்கான உரிமங்கள் வழங்குவது தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு அரசு உறுதிகொண்டுள்ளது என்றார்.

 

தற்போது நாட்டில் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோல், டீசலில்தான் ஓடுகின்றன. இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இவற்றை இறக்குமதிசெய்வதால் நாட்டுக்கும் பெருமளவு அன்னியச் செலாவணி இழப்பு ஏற்படுகிறது.

எத்தனால் கரும்புச் சாறைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் உருவாகும் . சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். அவ்வப்போது பெட்ரோல், டீசல்விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.பிரேசில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மாற்று எரி பொருளாக எத்தனால் பயன்படுத்தப் படுகிறது. அந்த வரிசையில் நமது நாடும் சேரப்போகிறது. 

Leave a Reply