தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் கை துண்டிக்கப் பட்டதற்கு நீதிகிடைக்க வேண்டும் என்று சவுதி அரசை பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் தெரிவித்தார்.

தமிழகத்தின் காட்பாடி அருகே உள்ள மூங்கி லேரி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி முனி ரத்தினம் (56). இவர், சவுதி அரேபியா தலை நகர் ரியாத்தில் உள்ள ஒருவீட்டில் வேலை செய்துவந்தார். வீட்டு உரிமையாளர் ஆத்திரத்தில் கஸ்தூரியை அடித்து உதைத்து அவரது கையையும் துண்டித்துவிட்டார். இதுகுறித்து ஊடகங்களில் தகவல்வெளியானது.அதன்பின்னர் மத்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகு கஸ்தூரி நாடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று சவுதி அரசை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இதுகுறித்து மக்களவையில் கேள்விநேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில்அளித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது.,

துருக்கியில் கடந்த மாதம் 16-ம்தேதி ஜி20 மாநாடு நடந்தது. அதில்பங்கேற்ற பிரதமர் மோடி, சவுதி மன்னர் சல்மான் அல் சாத்தை சந்தித்து, பாதிக்கப்பட்ட கஸ்தூரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கஸ்தூரியின் கை துண்டிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன், இந்திய தூதரகம்மூலம் சவுதி அதிகாரிகளை தொடர்புகொண்டு, கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தினோம். ஆனால், ‘வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் தப்பியோட முயற்சிக்கும் போது தவறி கீழேவிழுந்து கை உடைந்து விட்டது’ என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்படி அவர்கள் கூறியிருப்பது மிகவும் மன வேதனை அளித்தது.  விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை. கொடூரமாக சித்ரவதை அனுபவித்துள்ள கஸ்தூரிக்கு நீதிகிடைக்கும் வரை தொடர்ந்து சவுதி அரசை வலியுறுத்துவோம். வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் கொடுமைக்கு உள்ளாவதை தடுக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தொடர்ந்து மத்திய அரசு பேசிவருகிறது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்து கொள்கின்றனர் என்ற புகார் தான் பெரும்பாலும் வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply