இது வரை பிரதமராக இருந்தவர்களில் ஜம்முகாஷ்மீர் மீது அதிக அக்கறை காட்டியவர் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் தான் என்று அம்மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீத் பாராட்டினார்.

 ஜம்முவில் வியாழக் கிழமை இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மத்தியில் புதிய அரசு அமைந்ததில்இருந்து ஜம்மு-காஷ்மீர் மீது பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங் உள்ளிட்ட பிரதமர்களை நான் பார்த்து விட்டேன். அவர்களைவிட ஜம்மு-காஷ்மீர் மீது மோடி அதிகஅக்கறை காட்டி வருகிறார்.

 இதனை நான் மிகைப் படுத்திக் கூறவில்லை. நான் எதிர்பார்த்ததைவிட ஜம்மு-காஷ்மீர் மீது மோடிக்கு அதிக அக்கறை உள்ளது. அவர் இரு முறை ஜம்முகாஷ்மீர் தலைமை செயலாளரை சந்தித்து மக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் முதல் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் வரை ஆலோசித்துள்ளார்.

 இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். முதலில் நமதுநாட்டில் நாம் செய்யவேண்டிய பணிகளை சிறப்பாகச் செய்யவேண்டும். இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காஷ்மீரில் உள்ள அடிப்படைவாத சக்திகளால் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. காஷ்மீர் தனது மோசமான கால கட்டத்தை ஏற்கெனவே கடந்து விட்டது. சமீபத்தில் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துக்கொண்ட போது என்ன பேசியிருப்பார்கள் என்பது எனக்கு தெரியாது. எனினும், இந்தசந்திப்பு நடைபெற்றதே நல்ல விஷயம்தான்.

 கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மாநிலத்தில் இப்போது மிகவும் வெளிப் படையான நிர்வாகத்தை நடத்திவருகிறோம். அரசு பணி தேர்வுகளில் அரசின் தலையீடு கிடையாது. அரசுசெலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியான கணக்கு வைத்துள்ளோம்.

 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துவந்துள்ள சுமார் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு அளித்துள்ளது. அவர்கள் பலஆண்டுகளாக நிவாரணத் தொகைக்காக போராடி வந்தனர் என்றார் முஃப்தி முகமது.

Leave a Reply