சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் பாஜக.,வினர்  ஈடுபட்டு உள்ளனர்.

தமிழக பாஜக அமைந்துள்ள தியாகராய நகர் சாலைகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலைகளை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, துணைத்தலைவர் வானதி சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டு சாலைகளை சுத்தம் செய்தனர்.

பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகுந்த சேதத்திற்கு ஆளாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறோம். இன்றைக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை நகர சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். ஏனென்றால் சென்னையில் தொற்றுநோய் பரவாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். பொது மக்களும் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும்.

வடமாநிலம், தென்மாநிலம் என்று பிரித்து பார்த்து பிரதமர் நிவாரண நிதி ஒதுக்குவதில்லை. சேதத்தின் மதிப்பை அறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தின் வெள்ள சேதத்தை பற்றி அறிந்ததும் பிரதமர் உடனடியாக நிவாரண நிதியை அறிவித்தார். மேலும் மீட்பு நிவாரண நடவடிக்கைக்காக ராணுவம் உள்ளிட்ட முப்படைகளையும் அனுப்பிவைத்தார். வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.

மருத்துவ முகாம்கள் நடத்தவும், வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படவும் உத்தரவிட்டார். நிவாரண பணிகளில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே அரசியல் கட்சிகள் இதை அரசியல் ஆக்க கூடாது.

தற்போது ஏரிகள் திறப்பு குறித்து இருவேறு கருத்து நிலவி வருகிறது. இனி வருங்காலத்தில் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.