மராட்டிய அரசின்மீது எதிர்க் கட்சிகளால் ஒரு பைசாகூட ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்க முடியாது என பா.ஜ.க தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும் ஆன கோபி நாத் முண்டேக்கு பீட் மாவட்டம் பார்லியில் உள்ள வைத்ய நாத் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவுமண்டபம் எழுப்பப்பட்டு உள்ளது. இதில், கோபிநாத் முண்டேக்கு 20 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப் பட்டுள்ளது.

கோபிநாத் முண்டேயின் சமாதியை உள்ளடக்கிய இந்த நினைவு மண்டபத்தை சுற்றிலும் 72 அடி உயரத்தில் தாமரை வடிவம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, சட்ட சபை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே, மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

விழாவில் அமித் ஷா பேசுகையில், ‘‘மராட்டியத்தில் இன்றைக்கு பா.ஜ.க.,வின் பெருமைமிகு நாட்களுக்கு கோபிநாத் முண்டேதான் காரணம். ஏழைமக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் கட்சியை அவர் வளர்த்தார்’’ என்றார். மேலும், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநிலஅரசின் மீது எதிர்க்கட்சிகளால் ஒரு பைசாகூட ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்க இயலாது என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். 

Leave a Reply