நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார்.

இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை

பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல – இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது.

இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.

அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.

இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் – இல்லையில்லை – கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக – ரூ.440 கோடியைவிட – அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.

இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.

 

நன்றி நக்கீரன்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.