உலக நிலபரப்பில் இந்தியா 7-வது மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்றாலும், உலக மக்கள் தொகையில் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் எளிதாகவும், விரைவாகவும் சென்றுவருதற்கு விமானப் பயணத்தையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உள்ளது.

 

விமானப் போக்குவரத்து என்பது பொருளாதார ரீதியாக நடுத்தர மக்களுக்கு சாத்தியமில்லை. இதனால் நடுத்தர மக்களும், ஏழை மக்களும் போக்குவரத்திற்காக ரயில் பயணத்தையே விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்.

 

இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் வணிக ரீதியிலும், போக்குவரத்திற்கும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தாலும், காலதாமதம் என்பது தவிர்க்கமுடியாததாக உள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு பெரும் முயற்சி செய்து அதை நடைமுறைப்படுத்த ஜப்பானுடன் ஒப்பந்தத்தையும் செய்துள்ளது.

 

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 98 ஆயிரம் கோடியில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மற்றும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே, அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது.

 

வேகம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற ஜப்பானின் ஷிங்கான்சென் குழுமம் மூலம் புல்லட் ரயில் சேவையை தொடங்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

புல்லட் ரயில் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்..

 

* மும்பை – ஆமதாபாத் இடையே 505 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் இயக்கம்.

 

* 2017-ஆம் ஆண்டு தொடங்கும் புல்லட் ரயில் திட்டப் பணிகள் 2023-ஆம் ஆண்டு நிறைவடையும்.

 

* 11 புதிய சுரங்கப்பாதைகள் மற்றும் மும்பைக்கு அருகே கடலுக்கு அடியில் ரயில் பாதை அமைக்க முடிவு.

 

* இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.98 ஆயிரம் கோடி. இதில், ரூ.53 கோடியை ஜப்பான் கடனுதவியாக அளிக்கும்.

 

* இந்தக் கடனை 50 ஆண்டுகால அளவுக்கு 0.1 சதவீத வட்டிக்கு ஜப்பான் அளிக்கும்.

 

* 30 சதவீத உபகரணங்களையும், ரயில் என்ஜினையும் ஜப்பானிடம் வாங்க வேண்டும்.

 

புல்லட் ரயிலின் முக்கிய அம்சங்கள்..

 

* மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

 

* பயண நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறையும்.

 

ஜப்பானில் இயக்கப்படும் ஷிங்கான்சென் புல்லட் ரயிலின் சிறப்பு அம்சங்கள்…

 

* ரயில் பெட்டிகளின் கூரைகள் தட்டையாக அமைக்கப்பட்டுள்ளன.

 

* அதிர்வுகள் ஏற்படாதவாறு காற்று அழுத்தங்களோடு கூடிய ஸ்பிரிங்குடன் கூடிய சக்கரங்கள்.

 

* ஏரோ-டைனமிக் பாடியினால் ஆன குறைந்த காற்று எதிர்ப்புத் திறன் உடைய பெட்டிகள்.

 

* நேரான ரயில் பாதைகள், வேறு ரயில் பாதைகளின் குறுக்கீடுகள் முற்றிலும் இல்லை.

 

* இதுவரை சுமார் 5.6 பில்லியன் பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர்.

 

* பெரிய விபத்துகள் இதுவரை ஏற்பட்டதில்லை.

 

* குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது.

 

உலகின் அதிவேக புல்லட் ரயில்கள் …

 

* டிஜிவி : பிரான்ஸ், மணிக்கு 320 கி. மீ வேகம். பயண தொலைவு: 731 கி.மீ

 

* எச்எஸ்ஆர் : சீனா, மணிக்கு 300 கி. மீ வேகம். பயண தொலைவு: 3, 426 கி.மீ

 

* ஐசிஇ : ஜெர்மனி, மணிக்கு 300 கி. மீ வேகம். பயண தொலைவு: 273 கி.மீ

 

* ஷிங்கான்சென் : ஜப்பான், மணிக்கு 285 கி. மீ வேகம். பயண தொலைவு: 858 கி.மீ

 

இந்தியாவின் அதிவேக விரைவு ரயில்கள்..

 

* ராஜ்தானி எக்ஸ்பிரஸ் : மணிக்கு 140 கி.மீ. வேகம்

 

* காட்டிமான் எக்ஸ்பிரஸ் : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க முடிவு (டெல்லி- ஆக்ரா)

 

ரயில்வே துறையில் வருங்காலத் திட்டங்கள்…

 

* 10 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு அதிவேக ரயில் பாதைகள் அமைக்க முடிவு.

 

* ஆமதாபாத் முதல் டெல்லி வரை புல்லட் ரயிலை நீட்டிக்க முடிவு.

 

* அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 8.22 லட்சம் கோடி முதலீடு.

Leave a Reply