தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
 தமிழக வெள்ளச் சேதம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை சென்னை வந்தார்.


 
 சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அங்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.


 மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் என்னிடம் விளக்கிக் கூறினார். சென்னையில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட கடும் சேதங்கள் குறித்து விரிவாக அழர் தெரிவித்தார். ஏற்கெனவே 18 லட்சம் நபர்கள் வெள்ளத்தில் இருந்து மீட்டு 6,785 முகாம்களில் தங்க வைத்து உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.


 நான் அவரிடம் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தேன். இதற்காக மத்திய அரசின் 3 திட்டங்கள் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்.


 குடிசை வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் வீதம் உதவி வழங்கும். அவர்களுக்கு நிலம் இருந்தால் வீடு கட்ட ரூ.1.5 லட்சம் என மொத்தம் ரூ.2.5 லட்சம் ஒதுக்கப்படும்.
 இந்தத் திட்டம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்க வழி செய்யப்படும். ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.


 மெட்ரோ ரயில் விரிவாக்கம்: மெட்ரோ ரயில் திட்டம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்தப் பணியும் விரைவாக நடைபெறும்.


 சென்னை நகரில் ஆறுகள், நீர்நிலைகள் போன்றவைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால்தான் பெரிய அளவில் வெள்ளச் சேதம் ஏற்படுகிறது. தற்போது போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேரம் வந்து விட்டது.  இந்தியா முழுவதும் பாகுபாடின்றி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


 எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும். பொதுவாக ஒரு எம்.பி. அவரது தொகுதிக்கு மட்டும்தான் நிதி ஒதுக்க முடியும். ஆனால் அதிக வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள எந்த எம்.பி.யாலும், எந்த மாநிலத்துக்கும் நிவாரண நிதி அளிக்கலாம்.
 சென்னை நகரை மறுசீரமைக்க மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கும்.


 தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டு இருந்தார். தற்போது மத்திய அரசு வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியாக தமிழகத்தை அறிவித்து உள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply