வெள்ள நிவாரண பணிகளில் அரசியல்கட்சிகள் அரசாங்கத்துக்கு துணை நிற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலவீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பழுது பட்டதோடு, பல இடங்களில் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றன. இணைப்புக்கான ஆதாரங்களும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டு இருக்கிறது. இந்தவிவரங்களை எல்லாம் மத்திய பெட்ரோலிய துறை மந்திரியிடம் தெரிவித்து, அந்தமக்களுக்கு நிபந்தனை இன்றி புதிய சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, மனுவும் கொடுத்தேன்.

இது குறித்து கவனிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, வெள்ளத்தால் சமையல்கியாஸ் சிலிண்டர்களை இழந்தவர்களுக்காக தனி முகாம்கள் நடத்தப்பட்டு கணக்கு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்தசமயத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்துக்கு துணை நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். அரசாங்கத்தை சாராமல் தனிப்பட்ட முறையிலும் நாம் என்ன செய்யமுடியும் என்பதைதான் கட்சிகள் பார்க்கவேண்டும். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகிறோம்.

நாங்கள் எப்போதெல்லாம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குசென்று வந்தோமோ உடனடியாக மாநில அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துபேசி இருக்கிறோம். பிரதமரும் தனது வருகையின் போது தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து இருக்கிறார். இப்போதும் மற்ற அமைச்சர்களும் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவருக்கொருவரின் ஒத்துழைப்போடுதான் நடைபெறுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மத்திய சுற்றுச் சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மனு ஒன்றை அளித்தேன். இதுகுறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக அவர் கூறினார். இது தொடர்பான மசோதாவை இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் அவருக்கும் உள்ளது.

தமிழகத்தில் செங்கல் உற்பத்தி யாளர்கள் செங்கல் தயாரிப்பதற்கான மண்கிடைக்காமல் கஷ்டப்படுவது பற்றியும், மண் எடுப்பதற்கான தடை நீக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருக்கிறேன்.

தமிழக மக்களின் பிரச்சினைகளை பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் உடனுக்குடன் கவனித்து தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக பிரதமருக்கும், வெங்கையா நாயுடு உள்ளிட்ட மந்திரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று  மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.