பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டு தோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். நேற்று அதி காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக அதிகாலை, 3:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட பல்வேறு திருவா பரணங்களை அணிந்து புறப்பட்டார்.ராஜ மகேந்திரன் சுற்று வலம்வந்து, நாழிக் கேட்டான் வாசல் வழியாக, குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி, துறை பிரகாரம் வழியாக அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் பகுதியை அடைந்தார்.பட்டர்களின் வேதபாராயணங்களை கேட்டருளிய நம்பெருமாள், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், கடந்துசென்றார். நம்பெருமாளின் வருகைக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா… கோவிந்தா' என, கோஷம் எழுப்பியபடி சொர்க்க வாசலை கடந்து சென்றனர்.


சொர்க்கவாசலில் இருந்து வெளியேறிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைத்திருந்த திருக்கொட்டகைக்கு, அதிகாலை, 5:15 மணிக்கு வந்துசேர்ந்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்துவந்த நம்பெருமாள், மீண்டும், நேற்று இரவு, 12:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 1:15 மணிக்கு மூலஸ் தானத்தை சென்றடைந்தார்.


பகல் பத்து உற்சவம் நிறைவுபெற்று, ராப்பத்து உற்சவம் துவங்கியதை அடுத்து, வரும், 26ம் தேதிவரை மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 27ம் தேதி மாலை, 4:15 முதல், இரவு, 8:00 மணிவரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.டிசம்பர், 28ம் தேதி ராப்பத்து எட்டாம் நாள் அன்று பரமபதவாசல் திறக்கப்படாது. டிசம்பர், 29ம் தேதி மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 30ம் தேதி காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணிவரையும் பரமபத வாசல் திறந்திருக்கும்.இந்த நாட்களில், பக்தர்கள் பரமபத வாசலை கடந்துசெல்லலாம்.

வரும், 31ம் தேதி நம்மாழ் வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஜனவரி, 1ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.