இளம் குற்றவாளிகளின் வயதுவரம்பில் மாற்றம்செய்ய வகை செய்யும் சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

டெல்லியில் ஓடும்பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இளம் குற்ற வாளியின் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறார் நீதிச்சட்டத்திருத்த (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து அவசரமாக சிறார் நீதிச்சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இது மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப் பட்டநிலையில், இன்று இச்சட்ட மசோதா பற்றி மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் பங்கேற்று பேசிய பல்வேறு உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்தனர். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி யோசனை தெரிவித்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அதன்பின்னர் குரல்வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் மசோதாவுக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் கிடைத்ததால் மசோதா நிறைவேறியது.

இதன் மூலம், கற்பழிப்பு, கொலை போன்ற கொடுங் குற்றங்களில் ஈடுபடும் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வயது வந்தவர்களாக கருதப்பட்டு சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

இதையடுத்து நிலுவையில் உள்ள மற்ற மசோதாக் களையும் நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கமறுத்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Leave a Reply