இளைஞர்களின் மேம்பாட்டுக்காக தம்மால் முன்பு அறிவிக்கபட்ட "தொடங்கிடு இந்தியா- நிமிர்ந்திடு இந்தியா' புதிய செயல்திட்டம், வரும் ஜனவரி 16ம் தேதி தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்

 இது குறித்த விழிப்புணர்வு, நாட்டின் மூலை,முடுக்குகளை சென்றடைவதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 இது தொடர்பாக அகில இந்திய வானொலியில் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பான மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியின் மூலம், நாட்டுமக்களுக்கு அவர் ஆற்றிய உரை வருமாறு:

 எனது இளைய தலைமுறை நண்பர்களே! கடந்த ஆகஸ்ட் மாதம் செங்கோட்டையில் நான் ஆற்றிய சுதந்திரதின உரையின்போது, "தொடங்கிடு இந்தியா- நிமிர்ந்திடு இந்தியா' (ஸ்டார்ட் அப் இந்தியா-ஸ்டாண்ட் அப் இந்தியா) திட்டம்குறித்து தெரிவித்திருந்தேன். எனது அறிவிப்புக்கு பிறகு, இத்திட்டம் அனைத்து அரசு துறைகளுக்கும் பரவியது.

 இந்தியாவால் அனைத்தையும் தொடங்கிடும் தலை நகராக முடியுமா? அனைத்தையும் தொடங்கிடும் நிலையில், உற்பத்தித்துறை, சேவை துறை அல்லது விவசாயத்துறை தொடர்பான கண்டுபிடிப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என கேள்வி எழுந்தது.

 ஒவ்வொன்றிலும், புதியவை கண்டுபிடிக்கப்பட வேண்டும். புதியவற்றைக் கண்டுபிடிக்காமல், உலகத்தால் மேலும் முன்னேறிச்செல்ல முடியாது.

 "தொடங்கிடு இந்தியா-நிமிர்ந்திடு இந்தியா' திட்ட பிரசாரம் மூலம், இளைஞர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இத்திட்டத்தை, வரும் ஜனவரி 16ஆம் தேதியன்று மத்திய அரசு தொடங்கிவைக்கும். இத்திட்டமானது, நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,க்கள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், என்ஐடிக்களை ஒன்றாக இணைக்கும். இளைஞர்கள் எங்கெங்கு இருக்கின்றனரோ, அவர்கள் அனைவரும் இதன்மூலம் இணைக்கப்படுவர்.

 குறிப்பிட்ட நகரங்களில் வசிப்போர் மட்டுமே புத்திக் கூர்மை உடையவர்கள் என்று கணிப்பது தவறாகும். புத்திகூர்மைக் கொண்ட இளைஞர்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புகள் தேவைப் படுகின்றன. மத்திய அரசின் "தொடங்கிடு இந்தியா-நிமிர்ந்திடு இந்தியா' திட்டமானது, குறிப்பிட்ட நகரங்களுடன் மட்டும் நின்று விடாது. நாட்டின் அனைத்து மூலை, முடுக்குகளுக்கும் சென்றடையும். இத்திட்டம் தொடர்பாக அரசுக்கு யார் ஆலோசனைகள் அளித்தாலும், அவை வரவேற்கப்படும்.

மாற்று திறனாளிகளும் சம வாய்ப்புகள் பெறும்வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்களை நாம் மாற்று திறனாளிகள் என்று அழைப்பதை விடுத்து, அதீத திறமைகளைக் கொண்டவர்கள் என அழைக்க வேண்டும். ஏனெனில், சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில், அவர்களுக்கு அதீத திறமைகள் இருப்பது பல முறை வெளிப்பட்டுள்ளது.

 நரேந்திர மோடி செயலி அறிமுகம்: எனது பெயரில் (நரேந்திர மோடி ஆப்) செல்லிடப் பேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதை நாட்டு மக்கள் தங்களது செல்லிடப் பேசிகளில் பதிவிறக்கம் செய்து, என்னுடன் உங்களது கருத்துகளைக் பகிர்ந்து கொள்ளலாம். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி, வரும் ஜனவரி மாதம் 12 முதல் 16ஆம் தேதிவரை, சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தேசிய இளைஞர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தவிழா குறித்த ஆலோசனைகளையும் செயலி மூலம் இளைஞர்கள் எனக்குத் தெரிவிக்கலாம்.

விரைவில் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டுமக்கள் சந்தோஷமாகவும், புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

 இந்தியாவில் நடைபெறும் விழாக்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை காண்பதற்கு சுற்றுலாப்பயணிகள், இந்தியாவுக்கு அதிகம் வருகை தருவர். ஆதலால், சுற்றுலாத் தலங்களை சுத்தமாக வைத்திருக்கும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவ்வாறு சுத்தமாக வைத்திருந்தால்தான், இந்தியா மீதான உலகத்தின் நல்லெண்ணம் பாதிக்கப்படாது.

 சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குக்கு அளிக்கும் திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம், ரூ.40,000 கோடி பயனீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.