இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் வரும் மார்ச் 31- தேதி அமெரிக்காவில் சந்தித்துப்பேச உள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வரும் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் அணு சக்தி பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு மோடி, நவாஸுக்கு அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி இருநாட்டு தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். அப்போது இருவரும் தனியாக சந்தித்து பேசுவார்கள் என தெரிகிறது.

கடந்த 25-ம்தேதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி திடீர் பயணமாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச்சந்திப்பு இருநாட்டு உறவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி யுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் சுமுக உறவு துளிர்விட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். பாதுகாப்பு துறை நிபுணர் நிக்கோலஸ் பர்னஸ் என்பவர் கூறியபோது, இருநாட்டு உறவை தீவிரவாதிகள் சீர் குலைக்க முயற்சிக்கக் கூடும், அதைதடுப்பது பாகிஸ்தான் அரசின் கடமை என்று தெரிவித்தார்.

Leave a Reply