நடைமுறையில் இல்லாமல் போய் விட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சட்டங்களை ஒழிப்பதற்கான மசோதாக்கள், மேல்சபையில் முடங்கி உள்ளன.

நமது நாட்டில் இயற்றப்பட்ட சட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள் நடை முறையில் இல்லாமல் போய்விட்டன. அவை சட்டப் புத்தகத்தில் இருக்கின்றனவே தவிர, நடைமுறையில் அமல்படுத்தப் படவில்லை. அவை காலாவதியான சட்டங்களாக கருதப்படுகின்றன.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபின்னர், நடைமுறையில் இல்லாமல், காலா வதியாகி விட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறார்.

அந்தவகையில், வழக்கத்தில் இல்லாத 125 சட்டங்களை ஒழிப்பதற்கான 2 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுவிட்டன.

295 பழமையான சட்டங்கள் மற்றும் ரெயில்வே (ஒதுக்கீடு) சட்டம் உள்ளிட்ட 758 ஒதுக்கீட்டு சட்டங்களை (மொத்தம் 1,053 சட்டங்கள்) ஒழித்துக் கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட 2 மசோதாக்கள், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து மேல்சபையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நாளுக்கொரு சட்டம் என்றளவில், வழக்கத்தில் இல்லாத சட்டங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.

ஆனால் இந்த மசோதாக்களை மேல்–சபையில் நிறைவேற்ற முடிய வில்லை. இதற்கு, பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியாக உள்ள பா ஜ கூட்டணிக்கு, மேல்சபையில் பெரும்பான்மை இல்லை என்பதும், ஒவ்வொரு கூட்டத் தொடரும் ஏதேனும் ஒரு காரணத்தால் முடங்கிப்போய்விடுகிறது என்பதும் காரணம் ஆகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் கூடவுள்ள பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply