தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிசெய்யப்பட்ட பின்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவுசெய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுடன் குறை கேட்கும் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

 தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை யடையாத நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கருத்துசொல்வது சரியாக இருக்காது.

 முதலில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இறுதி செய்யப்படவேண்டும்.
 அதிகமான கட்சிகள் வரும் போது தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிக்கப்பட வேண்டும். இப்போது அதை சிந்திக்கிறோம். கூட்டணிமுடிவான பின்னர்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.
 ஜல்லிக்கட்டு தொடர்பாக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப் பாட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டுகள்.
 ஒரு முறை மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதாக இல்லாமல் தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுப்பதால்தான் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

 தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது, சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மத்திய அரசு ரத்துசெய்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர்களும் பார்வையிட்டு, அனைத்து துறைகளையும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். 147 வணிகர் சங்கங்களின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இது வரை 12,000 வணிகர்களுக்கு ரூ.280 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வணிகர்கள் மீண்டும் தொழில்தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார் அவர்.

Leave a Reply