பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாறுதல் மற்றும் பூமி சூடேறுதல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்ட நமது பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை நேரில் சந்தித்து உரையாடினார். அச்சந்திப்பு அரசுமுறை சந்திப்பாக இல்லாத காரணத்தாலும், இருவரும் எதேச்சையாக ஒருவரை ஒருவர் சந்தித்த காரணத்தால், தங்களது எண்ணங்களை பரிமாறிக்கொண்டதாகவும் இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நமது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் டோவல், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜன்சுவாவை பாங்காக் நகரில் டிசம்பர் 6 அன்று தேதி அன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.   அடுத்த கட்டமாக நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்லாமாபாத் செல்லுவது என்று முடிவெடுக்கப்பட்டது.   7ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் விரைந்தார். 

இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், மும்பை நகரில் 2008ஆல் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என எடுத்துரைத்தார்.  மேலும், இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் தொடர்வது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செயப்பட்டது.  அதன்பின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா எப்பொழுதும் தனது அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகின்றது என்பதை எடுத்துரைத்தார்.  இருந்தபோதிலும், அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளுக்கான உச்சி மாநாட்டில் நமது பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்பதற்கான எந்தவித உத்தரவாதத்தையும் தரமுடியாது என்பதையும் நமது நாட்டின் சார்பாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.  சார்க் உச்சி மாநாடு நடைபெறுவது வரையிலான காலக்கெடுவுக்குள், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அமைதிப் பேச்சுவார்த்தை செவ்வனே மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கும்பட்சத்தில் தான் இந்தியப் பிரதமர் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வார் என்பதை இந்த சந்திப்பு அவர்களுக்கு உணர்த்தியுள்ளது என்பது தெள்ளத்தெளிவு.

நன்றி விஜயபாரதம்

Leave a Reply