மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை கடந்த சில ஆண்டுகளாக நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. ஜல்லிக் கட்டை மீண்டும் நடத்தவேண்டும் என்று கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து நான் முயற்சித்துவருகிறேன். இதுதொடர்பாக அந்த துறையின் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை தொடர்பு கொண்டு பேசியபோது நிச்சயம் உங்கள் நம்பிக்கை பொய்க்காது என்றும், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எல்லா நடவடிக்கை களையும் எடுத்துவருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே வருகிற பொங்கல் நன்னாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டுடன் கூடிய தமிழர் திரு நாளை கொண்டாட முடியும் என்பது மீண்டும், மீண்டும் உறுதியாகிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகிற 19–ந்தேதி அன்று மத்திய மந்திரி நிதின் கட்காரியை குமரிமாவட்டத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளேன். 2003–ம் ஆண்டு நான் எம.பி.யாக இருந்தபோது முயற்சித்த நான்கு வழிச் சாலைக்கு (கன்னியாகுமரி காவல்கிணறு மற்றும் கேரள எல்லை வரையிலான நான்கு வழிச்சாலை) தற்போது அடிப்படை பணிகள் முடிக்கபட்டு, முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே வருகிற (ஜனவரி) 19–ந் தேதி மத்திய மந்திரி நிதின்கட்காரி வரும்போது அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும், மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல கூடியவிரையில் குமரி மாவட்டத்தில் அமைய உள்ள வர்த்தக துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டவும் முயற்சித்துவருகிறேன்.

குமரிமாவட்டத்தில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இந்த சாலைகளை சீரமைக்க கடந்த ஆண்டே மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கிவிட்டது. ஆனால் இது வரை தமிழக அரசு சாலைகளை சீரமைக்க எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு ஒதுக்கியபணம் விரயம் ஆகியுள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply