தமிழக பாஜக.தேர்தல் பணி முழு வீச்சில் நடைபெறுவதாகவும், பா.ஜ.க. கூட்டணி குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தேர்தல்சம்பந்தமான ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய அரசியல்நிலவரம், கூட்டணி குறித்த கருத்துகேட்பு, தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிதோறும் 5 பேர் கொண்டகுழு அமைத்து, மாவட்ட, மாநில மாநாடுகள் நடத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்ட சபைக்கு எந்தநேரத்தில் தேர்தல்வந்தாலும் அதை சந்திக்க பாஜக. தயாராக உள்ளது. தமிழகத்தில், பாஜக. ஒரு மாற்றுகட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல்பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.

சென்னை அரசு பொது மருத்துவ மனையில் 5 மாதத்தில் 2-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள ‘லிப்ட்’ வேலை செய்ய வில்லை. அடிப்படை கட்டமைப்பு சரியில்லை.

உயிரை காப்பாற்ற வேண்டி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இறப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. எனவே, தமிழக சுகாதாரத் துறை அரசு மருத்துவமனை மீது தனிக் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. பாஜக. மற்றும் இந்து முன்னணியினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். ஆம்பூரில் பாஜக. அமைப்பாளரை தாக்கியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

காவல் துறை எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, தமிழக முதல்-அமைச்சர் சட்ட ஒழுங்கு மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்பதில் பாஜக. உறுதியாக இருந்துவருகிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக. செய்துவருகிறது.

தமிழகத்தில், பாஜக. கூட்டணி குறித்து தற்போது நட்புரீதியிலான பேச்சுவார்த்தை மட்டுமே தொடங்கி உள்ளோம். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply