நாட்டின்பாதுகாப்பு குறித்தும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலைகுறித்தும் பிராந்திய மொழி பத்திரிகைகளைச் சேர்ந்த சுமார் 150 செய்தி ஆசிரியர்களுக்கு விளக்க மளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டமிட்டுள்ளார்.


வடஇந்திய மாநிலங்களிலும், வடகிழக்குப் பிராந்தியத்திலும் வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாநாடு வரும் 17,18 ஆகியதேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளது. ஹரியாணா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், ஜம்முகாஷ்மீர், சண்டீகர், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் வெளிவரும் செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்தமாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்.


அப்போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், இந்தியபாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள், கொள்கைகள், முன் முயற்சிகள் ஆகியவை குறித்தும் அவர் எடுத்துரைப்பார் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடித்தாக்குதல் நடத்தியதற்கு இருவாரங்களுக்குப் பிறகு செய்தி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் முப்படைகளிலும் கணிசமானஅளவில் உள்ளனர்.
எனவே அங்குள்ள மக்கள் பாகிஸ்தானுடனான நமது எல்லையில் நிலவும் பதற்றம்குறித்து கொண்டுள்ள கருத்து மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.பாகிஸ்தானுடனான நமது எல்லைகள் வரும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மூடப்படும் என்று ராஜ்நாத்சிங் ஏற்கெவே கூறியுள்ளார்.
இந்தியா மற்ற எந்தநாட்டையும் எப்போதும் தாக்கியதில்லை என்றும் மற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் உத்தேசம் அதற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply