எனது  நாட்டில் எனக்கு கறுப்புக்கொடி காட்ட உரிமையுள்ளது என்பதை நினைக்கும் போது  எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ராகுல் காந்தி, இது அனைவரும் பெருமைக்கொள்ள வேண்டிய விசயம்தான். ஆனால் கறுப்புக்கொடியை காட்டுவதற்கு பதிலாக அதைக்கொண்டு தேசத்தின் கழுத்தை அல்லவா நெரிக்க முயல்கிறார்கள் இது  எப்படி பெருமைக்கொள்ள வேண்டிய விஷயமாக முடியும் .

க்டந்த 2001 ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தை ஐந்து  தீவிரவாதிகள் கொண்ட குழு முற்றுகையிட்டு  தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகளின் தாக்குதலில் தங்களது 7 சகாக்களை இழந்து தேசத்தின் கௌரவத்தையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் காப்பாற்றினர் பாதுகாப்பு படையினர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முக்கிய மூளையாக இருந்து  சதித் திட்டம் திட்டியதற்காக  அப்சல் குரு கைது செய்யப்பட்டான். கடந்த  2002 டிசம்பர் 18 ஆம் டெல்லி உயர் நீதிமன்றம் அவன் மீதான குற்றத்தை உறுதி செய்து தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச  நீதிமன்றமும் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அப்சலின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.

அதன்படி 2006, அக்டோபர் 20 ஆம் தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என்று தேதியும்  நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அப்சல் குருவின் பாராளுமன்றம் மீதான தாக்குதல் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் கருப்பு கொடியாக மட்டும் தெரிந்ததோ என்னவோ, அவரது கருணை மனுவை காரணம் காட்டி எட்டு வருடம்  தாமதப்படுத்தி இறுதியில் வேறுவழியே  இல்லாமல்   2013–ம் ஆண்டு பிப்ரவரி 9–ந்தேதி தூக்கிலிட்டது அன்றைய காங்கிரஸ் அரசு.

தங்களது செயல்பாட்டின் மூலம் மிக தாமதமான தண்டனையை பெற்றுத்தந்து தங்களது தேச பக்தியை நிருபித்த  காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள்.  தொடர்ந்து அப்சல் குருவுக்கு ஆங்காங்கே அனுசரிக்கப்பட்ட புகலஞ்சளிகளை எல்லாம் மறைமுகமாக ஆதரித்ததன் மூலமும்,  கண்டும் காணமல் இருப்பதன் மூலமும் தங்கள் தேச பக்தியை தொடர்ந்தன.

இந்நிலையில்தான் மத்தியில் ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றம் அனைத்தையும் புரட்டி போட்டது. வழக்கமான ஒன்றாகி போன தேச விரோத செயல்பாடுகள் எல்லாம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது.

அதன் நீச்சமாகத்தான் ஜவஹர்லால் நேரு பல்கலையில் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும் அப்சல் குருவை ஆதரித்தும், காஷ்மீர் பிரிவினையை ஆதரித்தும், இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிராக இந்தியாவை துண்டாடுவோம், இந்திய ஒருமைப்பாட்டை குளைப்போம் என  தேச விரோத கருத்துக்களை உதிர்த்தும் பேசிய மாணவர் இயக்க தலைவர் உள்ளிட்ட சில மாணவர்கள் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.

ஆனால் இது தேச விரோதம் அல்ல சாதாரண ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பே, இது பேச்சுரிமை, போராடும் உரிமையை பறிக்கும் செயல், நாட்டில் நெருக்கடி நிலை நிலவுவது போன்ற சூழல்  உருவாகியுள்ளதை  இது காட்டுகிறது, சாதாரன வழக்கை போடவேண்டியது தானே, தேசவிரோத வழக்குக்கு என்ன அவசியம் வந்தது என்றெல்லாம் வினா எழுப்புகின்றன காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  கட்சிகள்,

அப்படி என்றால் அப்சல் குருவை ஆதரிப்பதுதான் தேச பற்றா?. இந்தியாவை துண்டாடுவோம் என்று கூறுவதுதான் தேச பற்றா?. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் ஆதவரவு கரம் நீட்டுவோம் என்று பாகிஸ்தானில் இருந்து பெருகிவரும் ஆதரவு கரங்கள்தான் தேசபற்றுக்கான சான்றா?.

மரணதண்டனைகள்  கொடியதுதான், ஆனால் பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அல்லவே. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பல நூறு தீவிரவாதிகளை பாதுகாத்து வந்த பாகிஸ்தான் இறுதியில் தனது நாட்டு இராணுவ பள்ளி மீதான தீவிரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மாணவர்களை பலிகொண்ட பின் கொத்து கொத்தாக தீவிரவாதிகளை தூக்கிளிட்டதே.  தூக்கிலிடப் பட்டவர்களை எல்லாம் அங்கு அப்பாவிகளாக யாரும் சித்தரிக்க முயலவில்லையே?, நினைவு தினங்களை எல்லாம் யாரும் அனுசரிக்க வில்லையே?. நிலைமை இப்படியிருக்க இந்தியாவில் மட்டும் ஏன் அப்சல் குருக்களுக்கு இத்தனை ஆதரவு?.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.