மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கடந்த சனிக் கிழமை இரவு உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவனில் இருந்து காரில் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தார். அவரதுகாருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு அதிகாரிகளின் கார்கள் வந்தன. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஸ்மிரிதி இரானியின் கார் வந்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளின் மீது ஒருகார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த டாக்டர் ரமேஷ் நாகர் என்பவர் உயிர் இழந்தார். அவருடன் வந்த அவரது மகள் சந்தாலி, உறவினர் பங்கஜ் ஆகியோர் காயம்அடைந்தனர்.

இந்தவிபத்தின் போது ஸ்மிரிதி இரானியுடன் வந்த பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. ஸ்மிரிதி இரானியின் கார்மீதும் பாதுகாப்பு வாகனம் ஒன்று மோதியது. என்றாலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து ஸ்மிரிதி இரானி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் எழுதி இருந்தார். விபத்து நடந்ததும், உடனடியாக தனது காரை நிறுத்தி, காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உதவியதாகவும், அவர்கள் பூரண குணம் அடைய பிரார்த்திப் பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த சம்பவத்தின்போது உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

ஆனால் அவர் இவ்வாறு கூறியதற்கு மாறாக, விபத்தில் காயம் அடைந்த சந்தாலி நேற்று கருத்து தெரிவித்தார். திருமணவிழாவுக்காக தாங்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு வாகனம் தங்கள் மீது மோதியதாகவும், அது ஸ்மிரிதி இரானியின் வாகனம்தான் என்றும் சந்தாலி நிருபர்களிடம் தெரிவித்தார். விபத்து நடந்ததும் உதவிசெய்யுமாறு ஸ்மிரிதி இரானியிடம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டதாகவும், அவர் உதவி செய்து இருந்தால் தனது தந்தை இறந்திருக்க மாட்டார் என்றும் அப்போது சந்தாலி கூறினார்.

ஆனால் இந்த தகவலையும், தன்மீதான புகாரையும் அமைச்சர் ஸ்மிரிதி இரானி மறுத்துள்ளார். இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகத்தின் சார்பில் விளக்கம் அளித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், டாக்டர் ரமேஷ் நாகர் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியவாகனம் ஸ்மிரிதி இரானியுடன் வந்த பாதுகாப்பு வாகனம் அல்ல என்றும், விபத்து நடந்ததை அறிந்ததும் அமைச்சர் தனது வாகனத்தை நிறுத்தி மதுரா சிறப்புபோலீஸ் சூப்பிரண்டிடம் பேசியதாகவும், அப்போது காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அமைச்சர் ஸ்மிரிதி இரானி அந்த இடத்துக்கு செல்லும் முன்பே அங்கு விபத்து நடந்து விட்டதாகவும், 2 பெண்கள் வந்த ஒருகார்தான் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும், விபத்தை ஏற்படுத்தியது மந்திரியின் பாதுகாப்புவாகனம் அல்ல என்றும் தெரிவித்தார். இந்தவிபத்தில் அமைச்சர் ஸ்மிரிதி முழங்காலில் லேசான காயம் அடைந்ததாகவும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய அவர் போலீசை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.