உரிமை கோராமல் அரசிடம் உள்ள நிதியை கொண்டு மூத்த குடிமக்க ளுக்கான நலநிதியத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

 இதன்மூலம் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ வசதியும், ஓய்வூ தியமும் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
 முன்னதாக, பொதுவருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) ரூ.3,000 கோடியும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்ஓ) ரூ.6,000 கோடியும் உரிமைகோரப்படாமல் உள்ளது. இந்த நிதி மூத்த குடிமக்களின் நலனுக்காக பயன்படுத்தபடும் என்று மத்திய நிதியமைச்சக் பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்தார்.

 அதன்படி இப்போது மூத்த குடிமக்களுக்கான நலநிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, அஞ்சலக சிறுசேமிப்புகளில் உரிமை கோரப்படாமல் உள்ள நிதி ஆகியவற்றைக் கொண்டு இந்த நல நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1-ம் தேதிக்கு முன்பு, உரிமைகோரப்படாத நிதி மூத்த குடிமக்கள் நல நிதியத்துக்கு மாற்றப்படும். மூத்த குடிமக்களின் மருத்துவ வசதி, ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு, கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு உதவுதல், முதியோர் இல்லங்களுக்கு நிதி உதவி அளித்தல் போன்றவற்றுக்காக இந்தநிதி பயன்படுத்தப்படும்.

 மூத்த குடிமக்களுக்கு மட்டுமல்லாது, வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், சிறு, குறு விவசாயிகளின் நலனுக்கும் இந்தநிதி பயன்படுத்தப்படும்.

 நமது நாட்டில் இப்போது 10 கோடியே 50 லட்சம் மூத்தகுடிமக்கள் உள்ளனர். அவர்களில் ஒருகோடிக்கும் மேற்பட்டோர் 80 வயதை தாண்டியவர்கள். மூத்த குடிமக்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வசித்து வருகின்றனர்.

 உரிமை கோரப்படாத நிதியை மூத்த குடிமக்கள் நிதியத்துக்கு மாற்றுவதற்கு முன்பு, அந்தநிதிக்கு உரிமையான வர்களைத் தொடர்புகொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதன் பிறகு யாரும் உரிமைகோராத பட்டசத்தில்தான் மூத்த குடிமக்கள் நிதியத்துக்கு மாற்றப்படும்.

 மூத்த குடிமக்களுக்கான நிதியம் மத்திய சமூக நீதித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும். இதற்கான குழுவில் நிதி, தொழிலாளர், கிராமப்புற மேம்பாட்டுத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டத்துறை ஆகியவற்றின் செயலர்கள் இடம் பெற்றிருப்பார்கள். ஆண்டுக்கு இருமுறை இக்குழு கூட்டம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.