சீட்டு நிதிமோசடிகள் நிகழாமல் தடுக்கவே அனைவருக்கும் வங்கி கணக்கை உறுதி செய்யும் "ஜன்தன்' திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

அஸ்ஸாமில் உள்ள ராஹா நகரில் பாஜக சார்பில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:


 அஸ்ஸாமில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கட்சி மாநில மக்களின் நலனுக்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அஸ்ஸாமில் முதல்வர் தருண்கோகோய் தலைமையிலான அரசு ஊழலை மட்டுமே முன்னெடுத்துச் சென்றது. இதனால், கடந்த 15 ஆண்டுகளில் மற்ற மாநிலங்கள் அடைந்த வளர்ச்சியில் மூன்றில் ஒருசதவீதத்தை கூட அஸ்ஸாம் அடையவில்லை.


 நாங்கள் (பாஜக) அஸ்ஸாமின் குடிமகன்களைப் பற்றிமட்டுமே கவலைப்படுகிறோம். ஆனால், முதல்வர் தருண்கோகோய் தனது மகனின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக இருக்கிறார்.


 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெயரளவில்மட்டுமே மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் சோனியாவிடமே இருந்தன. அதேநிலைமைதான் அஸ்ஸாமிலும் இருக்கிறது. அந்த அதிகார மையத்தை தாண்டி அஸ்ஸாம் முதல்வரால் செயல்படமுடியாது.


 மத்தியில் அந்த இருண்டகாலம் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு) முடிவடைந்து  விட்டது. தற்போது அஸ்ஸாமில் விடியல் பிறக்கட்டும். அஸ்ஸாமில் கைப்பாவையாக செயல்படும் அரசை மீண்டும் அனுமதிக் காதீர்கள். பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சிபுரிய வாய்ப்பளியுங்கள்.


 சாரதா – 2ஜி முறைகேடு: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் சாரதா நிதி நிறுவன மோசடி நடைபெற்றது. இந்தமோசடியில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 சாரதா நிதிநிறுவன மோசடி மட்டுமின்றி முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டயாரும் தப்பிக்க முடியாது என உறுதியளிக்கிறேன். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நியாயம் கிடைக்க எனது அரசு நடவடிக்கை எடுக்கும்.

தங்களுக்கென வங்கிக்கணக்கு இல்லாத ஏழைமக்களே நிதி நிறுவனங்களை நாடிச்செல்வர். சில நிதி நிறுவனங்கள் அந்த ஏழைமக்களை ஏமாற்றிவிடுகின்றன. இதனை தடுக்கும் நோக்கித்திலேயே, அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டத்தை (ஜன்தன்) எனது தலைமையிலான அரசு கொண்டுவந்தது. இதனால் ஏழை மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.

அஸ்ஸாமில் இறுதிகட்ட தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கின்றன. இந்தநேரத்தில் மக்களைக் குழப்புவதற்காக சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகிறார்கள். அதாவது, அஸ்ஸாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பன போன்ற வதந்திகள் பரப்பிவிடப்படுகின்றன.


 தோல்வி பயம் தொற்றிக்கொண்ட சில கட்சிகள், தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என நினைக்கின்றன. அதற்காக, இதுபோன்ற விஷமக் கருத்துகளை மக்களிடம் அவை விதைக்கின்றன. மக்கள் அதனை நம்பவேண்டாம்.


 அஸ்ஸாமில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும். அதற்கு அஸ்ஸாம்மக்கள் நிச்சயம் வழிகோலுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. பாஜக ஆட்சிக்குவந்தால் அஸ்ஸாம் முதன்மை மாநிலமாக மாற்றப்படும் என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.