கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க.,வை ஆட்சிக்கு கொண்டுவருவதே எனது லட்சியம் என்று மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த எடியூரப்பாவுக்கு  தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்துதெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலையில் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்ற எடியூரப்பா, மடாதிபதி சிவகுமாரசாமியை சந்தித்து ஆசிபெற்றார்.

முன்னதாக பெங்களூருவில் நிருபர்களுக்கு எடியூரப்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில பா.ஜ.க தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மீது நம்பிக்கைவைத்து தலைவர் பதவியை கொடுத்துள்ளனர். அதனால் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க.,வை ஆட்சிக்கு கொண்டுவருவதே எனது லட்சியம். இதற்காக மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டியதும் அவசியமானதாகும்.

இன்னும் ஓரிரு நாட்களில் கட்சியின் முக்கியதலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்த உள்ளேன். கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சிபணிகளும் நடைபெறவில்லை. மக்கள்விரோத நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுவருகிறது. அனைத்து துறைகளிலும் அரசு தோல்வியடைந்து விட்டது.

அதனால் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள குறைகள், முறை கேடுகளை மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும். அதே நேரத்தில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் பிரதமர் நரேந்திரமோடி செய்து வரும் சாதனைகள் குறித்தும் மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் 2018-ம் ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சியைபிடிப்பது உறுதி. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.

மாநிலத்தில் பல்வேறு தாலுகாவில் வறட்சி நிலவுகிறது. இதனால் வறட்சிபாதிக்கப்பட்ட தாலுகாக்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும் விவசாயிகளை சந்தித்தும்பேச இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.