நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டு மென்றால் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சட்டமேதையும், இந்திய அரசியல் சாசன சிற்பியுமான அம்பேத்கரின் பிறந்ததினம் நேற்று நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அம்பேத்கர் பிறந்த இடமான மத்தியபிரதேச மாநிலம் மோவ் நகரில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தனிவிமானத்தில் இந்தூர் வந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மோவ்நகருக்கு சென்றார். இதன் மூலம் அம்பேத்கர் பிறந்த ஊருக்கு சென்ற முதல் இந்தியபிரதமர் என்ற பெயரை அவர் பெறுகிறார்.

அங்கு அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள அம்பேத்கர் நினை வகத்தை  சுற்றிப்பார்த்தார்.அதைத்தொடர்ந்து, மோவ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, கிராமசுயாட்சி பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கிராம சுயாட்சி என்ற காந்தி யடிகளின் கனவு இன்னும் முழுவடிவம் பெறவில்லை. நாடு விடுதலைபெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும், அனைவரும் விரும்பிய இந்தமாற்றம் இன்னும் நிறைவேறவில்லை.

நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் ஏராளமான கிராமங்களில் மின்சாரவசதி எட்டவில்லை. இந்தபகுதிகளை சேர்ந்த மக்கள் 21-ம் நூற்றாண்டிலும், 18 மற்றும் 19-வது நூற்றாண்டு வாழ்க்கையையே இன்னும் வாழ்ந்துவருகின்றனர்.


வெறும் 5 அல்லது 50 நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சியால் மட்டும் நாட்டில் வளர்ச்சி நிகழ்ந்துவிடாது. மாறாக நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கிராமங்களின் பொருளாதாரம் அடிமட்டளவில் வலுப்பெறவேண்டும். எனவே கிராமங்களில் மாற்றத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளோம்.

சிலர் (காங்கிரஸ்) கடந்த 60 ஆண்டுகளாக தங்களை ஏழைகளின் ரட்சகர் என சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் இந்த கால கட்டத்தில் அவர்கள் ஏழைகளுக்காக என்ன செய்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால், அதிர்ச்சியேமிஞ்சும்.

அம்பேத்கருடன் தொடர்புடைய 5 இடங்களை முந்தைய காங்கிரஸ் அரசு மேம்படுத்த வில்லை. ஆனால் தற்போதைய அரசு அம்பேத்கரின் தொலை நோக்கு பார்வை சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது. டெல்லியில் அம்பேத்கருக்கு நினைவகம் கட்ட எங்கள் அரசு முடிவுசெய்துள்ளது. இதை நீங்கள் (காங்கிரஸ்) கடந்த 60 ஆண்டுகளில் ஏன் செய்யவில்லை? அம்பேத்கரின் மரபுகளை கடந்தகாலங்களில் குறைத்து மதிப்பிட்டதற்காக காங்கிரஸ் வருந்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.