பாராளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் குழு ஆராயும்.

பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட சபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் பெரும்செலவை சந்திக்க வேண்டியதாகிறது. அவற்றுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதிகாரிகள் பணிய மர்த்துதல் போன்றவற்றில் பெருமளவு செலவினை குறைக்கமுடியும் என்ற கருத்து எழுந்துள்ளது.

நாடுமுழுவதும் பாராளு மன்றத்துக்கும், சட்ட சபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற நிலைக் குழு பலத்த சிபாரிசு செய்தது. இதுதொடர்பாக பாராளுமன்ற நிலைக் குழு அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டது.

இந்தயோசனைக்கு காங்கிரஸ் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்புதெரிவித்து நிராகரித்து விட்டன. ‘‘இது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று’’ என்று அந்த கட்சிகள் கூறிவிட்டன.

இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியும், ‘‘இது சாத்தியம்இல்லை’’ என்று கூறியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ‘‘இந்த திட்டம் ஏற்றதொரு திட்டம் தான். ஆனால் திடீர் தேர்தல்கள் தேவைப்படலாம். இப்படிப்பட்ட நிலையில் இது பல்வேறு நடைமுறை சிக்கல்களை கொண்டுள்ளது’’ என கருத்துதெரிவித்தது.

அ.தி.மு.க. கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ளது. சிரோமணி அகாலிதளம் இந்தயோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய சட்ட கமிஷன் இதற்க்கு ஆதரவு தெரிவித்து, 1999–ம் ஆண்டு அறிக்கை அளித்துள்ளது.

சமீபத்தில், இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டெல்லியில் நிருபர்களுடன் கலந்துரை யாடியபோது, ‘‘பாராளுமன்றத்துக்கும், சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். அரசியல் தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். அது தான் எனது தனிப்பட்ட விருப்பமும் கூட’’ என்றார்.

அதே நேரத்தில், ‘‘இதில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தவேண்டியது இருக்கிறது. இது தொடர்பாக முயற்சிக்கிறோம்’’ எனவும் கூறினார்.

இதற்கிடையே தேர்தல்கமிஷன் புதிதாக 13 லட்சத்து 95 ஆயிரத்து 648 மின்னணு வாக்கு எந்திரங்களும், 9 லட்சத்து 30 ஆயிரத்து 432 கட்டுப்பாட்டு எந்திரங்களும் வாங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இதற்கு ரூ.5 ஆயிரத்து 511 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கொள்கை அளவில் நிதி அமைச்சகத்தின் செலவின நிதி குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

எனினும் இதுதொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்க மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய மந்திரிகள்குழு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார். இந்தகுழுவில் சட்டமந்திரி சதானந்த கவுடா, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் உள்ளனர்.

இந்த குழுவே, பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயவும் பணிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.