தீவிரவாதிகள் எல்லோரும் சமமே. அவர்களிடம் வேறுபாடில்லை என சீனாவிடம் தெளிவு படுத்தியுள்ளோம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

பதான்கோட் விமானப் படைத்தள தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மவுலானா மசூத் அசாரை ஜ.நா. மூலம் தடைசெய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில் இந்தியா தனதுகருத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சீனாவில் 5 நாட்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பியுள்ளார். சீன சுற்றுப் பயணத்தின் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் சீன ராணுவத்தினரின் நடமாட்டம் குறித்த பிரச்சினையை அவர் சீனாவிடம் எழுப்பினார். இதுதவிர, இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை, இருநாடுகளின் ராணுவ தலைமை அதிகாரி (டிஜிஎம்ஓ) இடையே ஹாட்லைன் தொடர்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் அவர் விவாதித்தார்.

சீனப்பயணம் குறித்து பாரிக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாதிகளுக்கு இடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நான் சீனாவிடம் தெளிவுபடுத்தியுள்ளேன். அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தவேண்டும். ஐ.நா.வில் அவர்கள் போட்ட முட்டுக்கட்டை தொடர்பாகவும் பேசியுள்ளேன். அந்த விவகாரத்தையும் சீனா இதர தீவிரவாதிகளை அணுகுவது போலவே அணுக வேண்டும் என கூறியுள்ளோம். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி உடனான சந்திப்பின் போது மிகத் தெளிவாகவே எடுத்துரைத் துள்ளார்.

நமது தரப்பை தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்த நாம் தயங்கவே இல்லை. அவர்களுக்கு அவர்கள்தரப்பு நியாயம் இருக்கலாம். ஆனால், நாம் நமது பிரச்சினைகளை உறுதியாக எடுத்துவைத்துள்ளோம்.

ராணுவதரப்பில் அதிக பேச்சு வார்த்தைகள் நடப்பதால், தேவையற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. 2006 மே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்தப்பட்டு, இறுதி செய்வதற்காக பரிமாறி கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் நாம் மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது. ஆனால், சில ஊடகங்களில் வெளிவந்துள்ள அளவுக்கு அதனை மிகத்தீவிரமாக அவர்கள் கருதவில்லை. நாம், நமது பல்வேறு வகையான வெளியுறவு நிலைப்பாடுகளை வைத்திருப்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு. இந்திய நலன்கருதியே எல்லா முடிவுகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது.

இவ்வாறு பாரிக்கர் தெரிவித் தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.