பா.ஜ.க  மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி 6 மற்றும் 8-ந்தேதி தமிழகத்தில் பிரசாரம்செய்கிறார். அமித்ஷா 4-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். மேலும் 20 மத்திய மந்திரிகளையும் பா.ஜ.,கட்சி தமிழகத்தில் களமிறக்குகிறது.


தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜனதா தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது. அதில் பா.ஜனதா மட்டும் 156 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது.

மீதமுள்ள தொகுதிகளுக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி 45 தொகுதிகளிலும், இந்திய மக்கள் கல்விமுன்னேற்ற கழகம் 24 தொகுதிகளிலும், தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி 2, கொங்கு நாடு ஜனநாயக கட்சி 2, அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு ஒன்று, தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சமூக கூட்டமைப்பு பேரியகத்திற்கு ஒன்று, கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் நலச்சங்கம் ஒன்று, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் ஒன்று, தமிழ்நாடுபோயர் முன்னேற்ற நல சங்கத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை, கோவை, மதுரையில் நடந்த பிரசார பொதுக் கூட்டங்களில் மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு பேசினார்.

சென்னையில் நடந்த பிரசார கூட்டத்தில் நிதின்கட்காரி கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். மேலும் அந்த கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்து வருகின்றனர்.


இந்நிலையில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்ய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அடுத்த மாதம் (மே) 6 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பிரசார பொதுக் கூட்டங்களில் மோடி பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தகூட்டங்கள் கன்னியாகுமரி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் எந்த இடங்கள் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதேபோல் 4-ந்தேதி அமித் ஷா தமிழகம் வருகிறார். அவரது பொதுக் கூட்டமும் எந்த இடத்தில் நடக்கிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. மேலும் மத்திய மந்திரிகள் பியூஷ்கோயல், ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் தமிழகம்வந்து பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிக்கின்றனர்.


பிரதமர் மோடியின் தமிழகபயணம் குறித்து மாநில பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க அகில இந்திய தலைவர்கள், தமிழகத்தின் பலஇடங்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பேச இருக்கிறார்கள். இவர்களின் வருகை தமிழக மக்களுக்கு ஒருநம்பிக்கையை ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் (மே) 6 மற்றும் 8-ந் தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். மேலும் 4-ந் தேதி அமித்ஷா தமிழகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இவர்கள் தவிர 20-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் பிரசாரம்செய்கிறார்கள். அவர்கள் தமிழக மக்களிடம், மத்திய அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் எடுத்து சொல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.