ஐ.எஸ். பயங்கர வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள லிபியாவில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 16 இந்தியர்கள், கொச்சி விமானநிலையத்துக்கு வியாழக்கிழமை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 கேரளத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரையும், உறவினர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் கட்டித் தழுவி வரவேற்றனர்.


 இதுகுறித்து வெளிநாடு வாழ் கேரளமக்கள் விவகாரத் துறை அதிகாரி ஆர்.எஸ்.கண்ணன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


 லிபியாவில் உள்ள சப்ரதாநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிக்கித்தவித்த 29 இந்தியர்கள் அண்மையில் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் லிபியாவின் திரிபோலி நகரில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து துபாய்க்கு வந்துசேர்ந்தனர்.


 மீட்கப்பட்டவர்களில், ஒன்றரைவயது நிரம்பிய 5 குழந்தைகளும், கர்ப்பிணியாக உள்ள செவிலியர் ஒருவரும் அடங்குவர். இவர்கள் நாடுதிரும்புவதற்காக செலவழிக்கப்பட்ட பயண சீட்டுகளுக்கான தொகை அனைவருக்கும் திருப்பியளிக்கப்படும்.


 மேலும், மீட்கப்பட்ட இந்தியர்களின் பணத்தையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  தமிழகத்தைச் சேர்ந்த 3 குடும்பங்கள் துபாயில் இருந்து சென்னைக்கு நேரடியாக சென்றடைவார்கள் என்று ஆர்எஸ்.கண்ணன் தெரிவித்தார்.


 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள லிபியாவின் ஜாவியா நகரில் உள்ள மருத்துவ மனையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் கேரளத்தைச்சேர்ந்த செவிலியரான சானு சத்யன் என்பவரும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் உயிரிழந்தனர். அதையடுத்து, அங்கிருந்த செவிலியர்கள் அனைவரும் நாடுதிரும்ப முடிவு செய்தனர்.


 கடந்த ஒருமாதமாக தங்களுக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், உணவு, மருந்துப் பொருள்கள் ஆகியவை கிடைக்க வில்லை என்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.


 முன்னதாக, கேரள மாநிலம், திருப்புனித்துரையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கேரளத்தைச் சேர்ந்த ஒன்பது குடும்பங்களும், தமிழகத்தைச்சேர்ந்த மூன்று குடும்பங்களும் லிபியாவில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அவர்கள் வியாழக் கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோ இந்தியா வந்தடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.