தமிழக ரயில்வே திட்டங்களில் தேக்கம் ஏதும் இல்லை என ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு ஆட்சிக்குவந்து, வரும் 26ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, தென்மாநிலங்களில் ரயில்வே துறை செயல்படுத்தி வரும் திட்டங்களின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு சனிக்கிழமை கூறியதாவது:

ரயில்வே துறைக்குத் தேவையான வளர்ச்சித்திட்டங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. அதனால், ரயில்வேதுறை போதுமான வளர்ச்சியை எட்டவில்லை. இதைச் சரிசெய்யும் வகையில் மத்தியில் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்குவந்த பிறகு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை துறைக்குள்ளாக மேற்கொண்டோம்.

ரயில்வேதுறை, நாட்டின் கடைக்கோடி மாநிலம் என கேரளத்தைக் கருதுவதில்லை. நாட்டின் தென்கோடியில் உள்ள கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை நுழை வாயில்கள் என்ற எண்ணத்துடனேயே ரயில்வே துறை அணுகுகிறது.

மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு கூட்டு ரயில்வே திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். தற்போது தமிழகத்தில் மீண்டும் பதவியேற்க உள்ள ஜெயலலிதா தலைமையிலான அரசும் கூட்டுரயில்வே திட்டயோசனையை பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசில் ரூ.878 கோடியாக இருந்த முதலீடு, தற்போது 77 சதவீதம் உயர்ந்து ரூ.1,553 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, தமிழகரயில்வே திட்டங்களில் தேக்கமே இல்லை என்பதை தெளிவாகக்கூற முடியும் என்றார் சுரேஷ் பிரபு.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள்குறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் சந்தீப் சக்úஸனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில்மட்டும் தமிழகத்தில் 1,253 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் அகற்றப்பட்டுள்ளன. சுமார் 1,024 ரயில்வே மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் கட்டப்பட்டுள்ளன. சுமார் 1,730 கி.மீ தொலைவுக்கான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களில் ரூ.93,795 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

"தூய்மை ரயில்', "தூய்மை இந்தியா' ஆகிய திட்டங்களின்கீழ் சுமார் 15,442 பயோ – டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் – கன்னியா குமரி (ரூ.900 கோடி); மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி (ரூ.800 கோடி); மணியாச்சி – நாகர்கோயில் (ரூ.1,700 கோடி); மொரப்பூர் – தர்மபுரி (ரூ.134 கோடி) ஆகிய ரயில்வே திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.