நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்து வருடங்கள் இரண்டு முடிந்தது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகளை பெருக்கும் அருமையான சிறப்பான ஆட்சி. கடந்த இரண்டு வருடங்களில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், ஜார்கந்த் போன்ற மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. டில்லி மற்றும் பீகாரில் அதிக விழுக்காடுகளை பெற்ற கட்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் கேரளா மற்றும் மேற்குவங்காள மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிக அளவிலான வாக்கு சதவீதங்களை பெற்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றும் முன்னேறிவருவது சிறப்பு. வட கிழக்கு மாநிலங்களை பாஜக அரசின் சாதனைகளால் கட்சி செல்வாக்கை பெற்று முன்னேறி வருவது சிறப்பு. ஆனால் தமிழகத்தில் நாம் குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளோம் என்பது நெருடலாக இருந்தாலும் கூட இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

1. இந்தியாவிலேயே ஒரு தேசிய கட்சி ஆளும் கட்சியாகவோ அல்லது எதிர்கட்சியாகவோ இல்லாத ஒரு மாநிலம் தமிழகம் என்ற அளவிற்கு தி மு க மற்றும் அ தி மு க தங்களின் அமைப்பு மற்றும் பணபலத்தால் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த ஆதிக்கத்தை மீறி, பணபலத்தை மீறி செயல்படுவதற்கு உண்டான மன திடம் நம்மிடம் இருந்தாலும், ஒருங்கிணைப்பு இல்லாததாலேயே மக்களிடத்தில் பாஜகவின் சாதனைகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

2. மத்திய பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை தமிழத்தில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களிடையே எடுத்து செல்ல தவறி விட்டோம் என்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த மத்திய பாஜக அரசின் செயல் திட்டங்கள் கடைக் கோடி கிராமங்களுக்கு எடுத்து செல்லவில்லை என்பது உண்மை. இளைய தலைமுறையினருக்கு எளிதாக புரியும் படி நம் பிரசாரங்களை உருவாக்குவது அவசியமாகிறது.

3. தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து கொண்டிருந்தாலும், நம் சித்தாந்தந்திற்கு எதிராகவே அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றன என்பதையும், காங்கிரஸ் மற்றும் ஒரு சில கட்சிகளின் பதவி ஆசை, முன்னேற்ற பாதையில் செல்லும் பாஜக அரசின் வளர்ச்சியை தடை செய்வதையை தங்களின் குறிக்கோளாக இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன. இதை தகர்க்க வேண்டுமென்றால், அடிப்படை அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் நாம் மேலும் ஈடுபட வேண்டும்.

4. இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் என்ற நம் கோஷமே, சமீபத்திய தேர்தலில் தி மு கவையும், அ தி மு கவையும், அளவுக்கு அதிகமாக கடுமையாக உழைக்க/ பணத்தை வாரி இறைக்க செய்தன என்பதை உணர்த்துகிறது. உண்மையில் இரு திராவிட கட்சிகளும் மூச்சை பிடித்து கொண்டு இந்த தேர்தலில் மோதியது, இது வரையில் இல்லாத அளவிற்கு நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கூட இருக்கலாம். ஆனால் இது ஒரு துவக்கம் மட்டுமே. நாம் போகவேண்டிய பயணம் மிக நீண்ட தூரம் என்பதை உணர்ந்து, நரேந்திர மோடி அவர்களின் கரத்தை, பாஜகவின் தொலைநோக்கு பார்வையை பலப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

அதே நேரம், இந்த பயணம் கூட்டு பயணம் என்பதையும் நாம் உணர வேண்டும். வழக்கம் போல் தனி நபர் விமர்சனங்களை முன்வைக்காமல், தனி நபர் துதிகள் பாடாமல் அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவதின் மூலம் வருகின்ற உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொண்டு, மத்திய பாஜக அரசு கிராம அளவில் செய்யும் சீர்திருத்தங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதன் மூலமே 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த தலைமுறைக்கான நம் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்ற முடியும் .

 

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.