நரேந்திரமோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நாடுமுழுவதும் 200 நகரங்களில் சாதனை விளக்க நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க ஏற்பாடுசெய்துள்ளது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்துகொள்கிறார்.

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறை வடைகின்றன. இதையொட்டி, மத்திய அரசு சார்பில் மட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க சார்பிலும் நாடுமுழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பா.ஜனதா பொதுச் செயலாளர் அனில் ஜெயின் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-

மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, பா.ஜ.க சார்பில் நாடுமுழுவதும் 200 நகரங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 27-ந் தேதி தொடங்கி, ஜூன் 15-ந் தேதிவரை இந்த நிகழ்ச்சிகள் நடக்கும். முதல் நிகழ்ச்சியாக, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன் பூரில் 26-ந் தேதி (இன்று) நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்ட சபை தேர்தல் நடப்பதால், பிரதமரின் பொதுக் கூட்டத்துக்கு அம்மாநிலத்தை தேர்வுசெய்துள்ளோம். மறுநாள் (27-ந் தேதி) மேகாலயாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். அன்றையதினம், கட்சிதலைவர் அமித் ஷா, பத்திரிகையாளர்களுடன் உரையாடுவார்.

200 நகரங்களில் நடைபெறும் சாதனைவிளக்க நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பொதுக்கூட்டங்களாகவே அமையும். அத்துடன், மத்திய அரசின் திட்டங்களால் பலன் அடைந்தவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருடனான சந்திப்பாகவும் அமையும். அந்தந்த பகுதியில் உள்ள அறிவு ஜீவிகளுடன் உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

எல்லா நிகழ்ச்சிகளிலும், அரசின்சாதனைகள் விளக்கிச் சொல்லப்படும். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி மனோகர்பாரிக்கர் கலந்து கொள்வார்.

இந்த நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட தலா 3 பேர் அடங்கிய 33 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குழுக்களில் மத்திய கேபினட் மந்திரிகள், இணை மந்திரிகள், மூத்த தலைவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பா.ஜ.க எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் அவரவர் தொகுதியில் ஒரு நாள் இரவு தங்கி, மத்திய அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை கீழ்மட்டளவில் விளக்கிச்சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், கட்சியின் தேசியசெயற்குழு ஜூன் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் இவ்வாறு அனில் ஜெயின் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.