இந்தியாவில் வரும் 2023-ம் ஆண்டில் முதல் புல்லட்ரயில் ஓடும். இந்திய துணைக் கண்டத்தில் இது ரயில்வே துறையில் புதியசகாப்தமாக இருக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வரும் 2023-ம் ஆண்டு இந்தியாவில் முதல் புல்லட் ரயில் ஓடும். இத்திட்டத்தின் பல்வேறு படிநிலைகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம். மும்பை-ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவை 2 மணிநேரங்களில் இது கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கி.மீ. எனினும், மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். திட்டமிட்டபடி பணிகள் நடந்துவருகின்றன. இதர பெருநகரங்களை இத்திட்டத்தில் இணைப்பது தொடர்பான ஆய்வு நடந்துவருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட்ரயில் சேவையில், 21 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பயணமாக இருக்கும். இந்த அனுபவத்தை பயணிகள் பெற உள்ளனர். இத்திட்டத்தின் மொத்த மதிப்பான 97 ஆயிரத்து 636 கோடி ரூபாயில், 81 சதவீதத்தை ஜப்பான் கடனாக அளிக்கஉள்ளது. இம்மதிப்பீட்டில், திட்டசெலவு உயர்வு, கட்டுமான காலத்திற்கான வட்டி, இறக்குமதி வரி உள்ளிட்டவையும அடங்கும். ஜப்பான் அளிக்கும் கடன் 50 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 0.1 சதவீத வட்டியைக் கொண்டது. 15 ஆண்டுக்கு கடன் தவணையைக் காலம் தாழ்த்திச் செலுத்தலாம்.

ஜப்பான் நிறுவனம் ஜேஐசிஏ அளித்துள்ள திட்ட கருத்துருவின்படி, பெரும்பாலான பாதை உயர்பாலத்தில் அமைக்கப்பட உள்ளது.

சிக்னல், மின்சாதனங்கள் உள்ளிட்டவையும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. கட்டுமானப்பணி வரும் 2018 இறுதியில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.