கன்னியா குமரியிலிருந்து சென்னைக்கு வந்த திருவள்ளுவர் சிலை, நேற்று கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது. தருண்விஜய் எம்பி முன்னிலையில் ஆளுநர் கே.ரோசய்யா கொடியசைத்து சிலைப் புறப்பாட்டை தொடங்கிவைத்தார்.
 
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை வரும் 29-ந்தேதி அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தரகாண்ட் பாஜக எம்.பி. தருண்விஜய் மேற்கொண்டு வருகிறார்.
 
இதற்காக அவர் மாதிரி திருவள்ளுவர் சிலை ஒன்றை கன்னியா குமரியில் இருந்து கங்கைபயணம் என்ற பெயரில் எடுத்து செல்கிறார். இந்த பயணம் கடந்த 18-ந்தேதி கன்னியா குமரியில் இருந்து தொடங்கியது. இந்த பயணம் நேற்று சென்னை வந்தடைந்தது. சென்னையில் இருந்து கங்கைபயணத்தை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
 
இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மேற்குவங்க முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகி சூர்ய நாராயண் ராஜி, ராமகிருஷ்ண மடம் சென்னை மேலாளர் விபுதானந்தஜி, கவிஞர் வைரமுத்து மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் ஆளுநர் கே.ரோசய்யா பேசுகையில், "திருக்குறள் ஒருபொக்கிஷம். காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியது. உலகிற்கு பொதுவானது. எல்லா நேரத்துக்கும் பொருந்தக் கூடியது. மனித உணர்வுகளின் மிக தூய்மையான வெளிப்பாடுகள். உலகின் பிற எல்லா இலக்கிய ங்களிலும் மேலானது. உயர்வான விவேகத்தை அளித்து, வாழும்கலையை கற்பித்து வழி நடத்துகிறது. தமிழ்மொழி என்னும் கிரீடத்தில் வைரமாக மின்னுகிறது.
 
தமிழ் இலக்கிய படைப்புகளில் நட்சத்திரமாக மின்னுகிறது. திருக்குறளின் வளமும், திருவள் ளுவரின் புகழும் இந்த நாட்டில் மட்டும் அல்ல உலகம் எங்கும் அறியப்படவேண்டும்," என்றார்.
 
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தற்போது தருண்விஜய் செய்து வருவது மதத்திற்கு அப்பாற்பட்டது. இதில் எந்த அரசியலுக்கும் இடம்இல்லை. அரசியலுக்கு இடம் இருந்தால் மாற்று கட்சியினர் இங்கு வந்திருக்க மாட்டார்கள். நேற்று (நேற்று முன்தினம்) உலகயோக தினம் கொண்டாடப்பட்டது. அதேபோன்று வள்ளுவர் பிறந்தநாளை பொதுமறை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடும் நாள் வரவேண்டும் என விரும்புகிறேன்," என்றார். தருண் விஜய் எம்பி உள்ளிட்டோரும் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.