மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 60 ஆண்டுகால கனவு திட்டமான குளச்சல் துறைமு கத்துக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த துறைமுக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி. குளச்சல் துறைமுகம் முக்கிய வர்த்தக துறைமுகமாக உருவாகும்.

கருணாநிதி, வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை மத்திய அரசு ஏற்று நடத்துவதற்கு கடந்த செப்டம்பர்மாதம் ஒப்புதல் அளித்தார். அதனை தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதிகோரி உள்ளேன்.

விழிஞ்சம் துறைமுகம் அமையும் போது, அதற்கு நான் ஆதரவுகொடுத்தேன். அதேநேரத்தில் குளச்சல் துறைமுகம் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினேன். குளச்சல் துறைமுகத்தால், விழிஞ்சம் துறைமுகம் பாதிக்கப்படும் என்பது நல்லசிந்தனை இல்லை. கொழும்பில் உள்ள துறைமுகங்களை விரிவுபடுத்தும் பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். அங்கு கையாளப்படும் 50 சதவீத சரக்குகள் இந்தியாவைசேர்ந்தவை.

தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டில் 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3, 4 ஆகிய வடக்குசரக்கு தளம் தளங்கள் அமைக்கப்படுகின்றன. குளச்சல்துறைமுக முதற்கட்ட பணிகளுக்கு தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் நிதிஅளிக்க உள்ளன. இது அந்த துறைமுகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்தியமீனவர்களின் படகுகள், இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கை படகுகள் நம் நாட்டில் பிடித்து வைக்கப் படுகின்றன. இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தான் அணுகவேண்டும். இருநாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மெட்ராஸ் ஐகோர்ட்டு என்பது சென்னை உயர் நீதிமன்றம் என்று மாற்றப்பட்டதற்கு பிரதமர் தான் காரணம்.

உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிடுவது சிறந்தது. தூத்துக்குடி, நாகர்கோவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளை கட்டுவதற்கும், கேந்திரியவித்யாலயா பள்ளிக்கூடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.