நாகர்கோவிலில் பழுதடைந்த வடசேரி–கோட்டார்சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


இந்திய வேளாண்மை ஆராய்ச்சிகழகம் மற்றும் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய பிரதமமந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டவிழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயக் கண்காட்சி நாகர்கோவிலில் உள்ள ஒருதிருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இதனையடுத்து விவசாயக் கண்காட்சியை பார்வையிட்டு தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார்.

முன்னதாக நாகர்கோவிலில் குமரிமாவட்ட இந்து கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–

குளச்சல் வர்த்தக துறை முகம் கட்டாயமாக வந்தேதீரும். அப்படி வரும்போது நமது மனதில் தோன்றும் அடுத்த விஷயம் வேலை வாய்ப்பு. ஒரு துறைமுகம் கொண்டுவந்தோம் என்றால் 5 ஆயிரம், 10 ஆயிரம் பேர் வேலை பார்ப்பது பெரிதல்ல. குறைந்தபட்சம் 100 பேருக்காவது வேலை கொடுப்பவர்களாக நமது வருங்காலசந்ததியினர் திறன் பெற்றவர்களாக, தொழில் நடத்துபவர்களாக வந்தாகவேண்டும். அப்போது தான் ஒரு துறைமுகம் கொண்டு வந்ததற்கு பயன் கிடைத்ததாக இருக்கும். அதனால்தான் இளைஞர்களிடம் நான்சொல்வது தொழில்தொடங்க சிந்தனை செய்யுங்கள் என்று கூறி வருகிறேன். அதற்கான வழிகாட்டுதல் களையும், உணர்வுகளையும் நாம் கொடுக்கவேண்டும்.

கடந்த பல மாதங்களாக நாகர்கோவில் நகரத்தில் சாலைகள் சரியில் லாமல் இருந்தது. அதற்கு அடிப்படையான காரணம் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப் பட்டதுதான். அதை திருப்பி நிரப்பவேண்டும் என்றால் அதற்கான பணம் நகராட்சியில் இல்லை. நேற்று கூட பா.ஜனதா கட்சியினர் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநில அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்ததாக வந்தசெய்தியை படித்தேன். எனவே இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறேன். நாகர்கோவில் வடசேரியில் இருந்து கோட்டார்வரை செல்லக்கூடிய சாலையை சீரமைப்பதற்கு நிதி ஏற்பாட்டை நாம் செய்திருக்கிறோம் என்பதை தெரிவித்துகொள்கிறேன். அடுத்தகட்டமாக மற்ற சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.