காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத்தையும், ஆனந்த் சர்மாவையும் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லியும், அனந்த் குமாரும் சந்தித்து பேசினர். ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவது பற்றி விரிவாக ஆலோசித்தனர்.

நாடுமுழுவதும் ஒரே விதமான மறைமுக வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ.,கூட்டணி அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைவரி மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல்செய்தது. மக்களவையில் ஆளுங் கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளதால் இந்த மசோதா, கடந்த ஆண்டு மே மாதம் 6–ந்தேதி நிறைவேறியது.

ஆனால் மேல்சபையில் ஆளுங்கூட்டணிக்கு போதியபலம் இல்லாத காரணத்தால் இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ்தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற ஆதரவு தருவதற்கு 3 முக்கிய நிபந்தனைகளை அந்தகட்சி விதித்து வருகிறது. அவை:–

* ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 18 சதவீத அளவுக்குத்தான் இருக்கவேண்டும்.

* மாநில அரசுகள் ஒருசதவீதம் கூடுதல் வரி விதிக்கலாம் என்ற அம்சத்தை நீக்கவேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் இடையே ஜி.எஸ்.டி. வரிவருவாய் பகிர்வில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரவேண்டும்.

இந்த மசோதாவை வரவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்தமசோதா அரசியல் சட்டதிருத்த மசோதா என்பதால், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட பின்னர் மாநில சட்டசபைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும். 50 சதவீத மாநில சட்ட சபைகள் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பின்னர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தனது ஒப்புதலை வழங்குவார். அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

அந்தவகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான டெல்லி மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தையும், துணைத் தலைவர் ஆனந்த் சர்மாவையும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும், பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி அனந்த் குமாரும் நேற்று சந்தித்துபேசினர். மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்துடன், செய்தி, ஒலிபரப்புத் துறை மந்திரி வெங்கையா நாயுடு தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின் போது ஜி.எஸ்.டி. மசோதா மீது காங்கிரஸ் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அருண் ஜெட்லி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘மசோதாவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆரம்பகட்ட ஆலோசனை நடத்தினோம். இனி நாங்கள் கட்சியுடன் விவாதம் நடத்துவோம். ஜி.எஸ்.டி மசோதாவில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சிசெய்கிறோம். பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய உடன் மீண்டும் சந்தித்துப்பேசுவோம்’’ என கூறினார்.

ஜி.எஸ்.டி மசோதா அமலுக்கு வந்துவிட்டால், பொருளாதார வளர்ச்சியில் 2 சதவீத உயர்வு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.