வணக்கம், நலம். தங்களுடைய ஆரோக்கியத்திற்கு ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.கங்கை நீர் இனி தபால் நிலையங்கள் மூலமாகப் பொது ஜனங்களுக்கு விற்கப்படும் என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பைக் கேலி செய்து "பாஜக ஆட்சி தொடர்ந்தால் இனி விபூதி குங்குமம் கூட விநியோகம் செய்யப்படும்" என ஏளனம் செய்திருக்கிறீர்கள்.

இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் நூறு சதவீதம் ஹிந்து விரோதக் கட்சி என்பதை நிரூபித்து, தங்களின் உண்மை உருவத்தை மீண்டும் வெளிக்காட்டியமைக்கு மகிழ்ச்சி.

தங்கள் பார்வைக்குப் புலப்படாது போன, அல்லது நீங்கள் வேண்டுமென்றே மறைத்துவிட்ட ஒரு விஷயத்தை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசு அறிவித்த கங்கை நீர் விநியோகம் "விற்பனைக்கு" மட்டுமே! "இலவசம்" அல்ல!!

ஆனால் மக்கள் வரிப் பணத்திலே நாலாயிரத்து ஐநூறு மெட்ரிக் டன் அரிசியினை ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவதற்கென மசூதிகளுக்கு இலவசமாக வழங்கியதே அதிமுக அரசு, அப்பொழுது "அதிமுக ஆட்சி தொடர்ந்தால் இனி அனைத்து மசூதிகளுக்கும் மயிலிறகும், சாம்பிராணியும் இலவசமாகத் தரப்படும்" என்ற உங்களது நையாண்டி அறிக்கை ஏன் வெளிவரவில்லை?

மாநில முதல்வரோ, நீங்களோ என்றேனும் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதற்கு மட்டுமே தபால் துறையைப் பயன்படுத்தி வருகிறீர்கள். மற்றபடி அத்துறையின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது.

நாடு முழுவதிலும் மிகப்பெரிய உட்கட்டமைப்பைக் கொண்ட தபால் துறை முழுத் திறனுடன் செயல்பட வேண்டும் எனில் அது ஒரு பல்நோக்கு மையமாக உருப்பெற வேண்டும். அப்படி ஆவதனால் மட்டுமே பல லக்ஷம் தபால்துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

இதை முழுமையாக உணர்ந்த மத்திய மோடி சர்க்கார் பெரும்பான்மை ஹிந்துக்கள் விரும்பும் கங்கா ஜலத்தை, தபால் துறை குறிப்பிட்டத் தொகைக்கு விற்பனை செய்யும் என அறிவித்து உள்ளது.

அது மட்டுமல்ல! அங்கு இதற்கு முன்பே அவ்வப்போது கடிகாரம் முதல் குளிர்சாதனப் பெட்டி வரையில் விற்கப்பட்டு வந்தது உங்களுக்குத் தெரியாததா!

வாரணாசிப் பட்டு வேண்டுமென விரும்பும் வாடிக்கையாளர்களுக்குக் காசியில் இருக்கும் நெசவாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறதே இதே தபால் துறை.

நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல் திராவிட நாட்டுக்குள்ளேயே சிந்தனையைச் சுருக்கி வைத்தால் அறிவு விசாலப்படாது!

தபால் நிலையங்கள் வழியே கங்கா ஜலம் விற்பனை என்ற அறிவிப்பு ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது? ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை நீரை விருப்பப்படுவோர் விலைக்கு வாங்கிக் கொள்வதில் ஆட்சேபம் எங்கே இருக்கிறது!

பொது ஜனங்களின் வரிப்பணத்தில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் தரப்படுகின்றன. நீங்கள் செய்ததற்கும் விளக்கம் இல்லை. பிறர் அதைச் செய்தால் எதிர்த்துப் பேசிட, அறிக்கை வாசித்திட உங்களுக்கு முதுகெலும்பும் இல்லை. நீங்களும் அதற்கு உடந்தை. ஆனால் இன்று மத்திய அரசு நடவடிக்கையை நக்கல் செய்திருக்கிறீர்கள்.

ஹிந்து மக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதற்காகவும், காசு கொடுத்துக் கூட கங்கை நீரை வாங்கும் வசதி அவர்களுக்கு மறுக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காகவும் தாங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி…! வணக்கம்…!!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.